"ரெய்னா இந்த சீசனில் பங்கேற்க மாட்டார்" என்ற அறிவிப்பு வந்ததிலிருந்தே அதற்கான காரணம் என்ன என்று பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
எதையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் தனிப்பட்ட காரணங்களால் ரெய்னா வெளியேறியதாக சிஎஸ்கே தரப்பு தெரிவித்திருக்க, ரெய்னாவின் மாமா இறந்ததுதான் இதற்குக் காரணம் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அது நடந்து ஒரு வாரம் இருக்கையில் திடீரென இப்போது கிளம்புவதற்கான காரணம் என்ன, அதுவும் இரண்டு மாதங்கள் நடக்கும் ஐபிஎல்-ல் இருந்து ஏன் முழுமையாக விலகவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அணி நிர்வாகத்துக்கும் ரெய்னாவுக்குமான கருத்து வேறுபாடுதான் அவர் வெளியேறுவதற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளர் ஶ்ரீனிவாசன் ஆங்கில இதழான அவுட்லுக்கிற்கு (Outlook) பேட்டி அளித்திருந்தார். அதில் "அந்த காலத்து நடிகர்கள் போல 'தான் ஒரு பெரிய நட்சத்திரம்' என அதிக பந்தா காட்டுகின்றனர் கிரிக்கெட் வீரர்கள். சில நேரங்களில் சிலருக்கு வெற்றி தலைக்கு ஏறிவிடுகிறது... அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது" என்று சொல்லியிருந்தார்.
இந்நிலையில் தற்போதுதான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார் ஶ்ரீனிவாசன். "ரெய்னா சிஎஸ்கேவுக்கு வழங்கியிருக்கும் இத்தனை ஆண்டு பங்களிப்பு அளப்பரியது. இப்போதைய ரெய்னாவின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவருக்கு உறுதுணையாக சிஎஸ்கே நிர்வாகம் நிற்கும்."
அவுட்லுக்கிற்கு கொடுத்தப் பேட்டியில் கிரிக்கெட் வீரர்கள் பற்றி விவரிக்கையில் Prima donna என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருந்தார் ஶ்ரீனிவாசன். இந்த வார்த்தைதான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக இப்போது அவர் தெரிவித்திருக்கிறார். "அந்த வார்த்தையை நான் நெகட்டிவாக பயன்படுத்தவில்லை" என்று சொல்லியிருக்கிறார்.

'Prima donna' என்னும் இந்த வார்த்தை இரண்டு பொருள்கள் தரும். பெரிய இசைக் கச்சேரியில் பாடும் முன்னணி பாடகியை Prima donna என்று அழைப்பார்கள். இதுதான் நேரடி பொருள். தன்னை பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு பிரபலங்கள் அதிக பந்தா காட்டுவதை 'Prima donna' குணம் எனவும் அழைப்பார்கள். இது இன்னொரு பொருள். இந்த வார்த்தையை நேரடி பொருளில்தான் பயன்படுத்தியதாக விளக்கம் அளித்துள்ளார் ஶ்ரீனிவாசன்.
"இப்படி நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் கொரோனாவுக்கு நடுவே நடக்கும் இந்த வருட ஐபிஎல் தொடர் பற்றியும் இந்தப் பேட்டியில் பேசியிருக்கிறார் அவர்.

"ஐபிஎல் இந்தியாவின் பெருமை... உலகமெங்கும் பலராலும் பார்க்கப்படும் ஒரு ஸ்போர்ட்ஸ் பிராண்ட். வெறும் 13 ஆண்டுகளில் எத்தனையோ விஷயங்களைச் சாதித்திருக்கிறது ஐபிஎல். இதை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இன்னும் வளர வேண்டும். ஏற்கெனவே இருமுறை வெளியில் ஐபிஎல் நடத்தப்பட்டிருந்தாலும், இம்முறை சவாலே வேறு. UAE-வில் நடக்கப்போகும் இந்த ஐபிஎல் COVID-க்கு பின் நடக்கும் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்திற்கும் ஒரு பென்ச்-மார்க்காக அமையும். நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு விஷயமாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.
இப்படி விளக்கம் அளித்திருந்தாலும் ரெய்னா பற்றிப் பேசிவிட்டு இப்போது ஶ்ரீனிவாசன் அதைச் சமாளிப்பதாகவே சோஷியல் மீடியாக்களில் கமென்ட்டுகள் பறக்கின்றன.
ரெய்னாதான் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.
from Latest News https://ift.tt/31KO8cl
0 Comments