https://gumlet.assettype.com/vikatan/2019-10/f8a3c8da-67fe-4395-854b-d2fb36d86928/DD_6.jpg`இளம்பெண் உடலை அதிகாலை 2.30 மணிக்குத் தகனம் செய்த போலீஸார்?'- உ.பி வன்கொடுமை வழக்கு சர்ச்சை

2012 நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் போன்ற கொடுமைக்கு ஆளான உத்திரப்பிரதேச பட்டியலின இளம்பெண் கடுமையான பாதிப்புகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எலும்பு முறிவு, பக்கவாதம், துண்டிக்கப்பட்ட நாக்கு என்று கொடூரமாகப் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், பெண்ணின் பெற்றோர்களைத் தடுத்து, அவசர அவசரமாக அதிகாலை 2.30 மணியளவில் பெண்ணின் உடலை ஊருக்கு வெளியில் காவல்துறையினர் தகனம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2018-ம் ஆண்டைவிட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 87 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உத்திரப்பிரதேசம் மாநிலம் மேற்குப் பகுதியில் டெல்லிக்கு மிக அருகில் இருக்கும் சிறிய மாவட்டம் ஹாத்தரஸ். அந்த மாவட்டத்தின் சண்ட்பாவை கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 4 இளைஞர்கள் அந்த இளம்பெண்ணை தூக்கிச் சென்று அருகிலிருந்த வீட்டில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், அவரைக் கடுமையாகத் தாக்கவும் செய்தனர்.

இதில், மயக்கமடைந்த அப்பெண்ணை சாலை ஓரம் போட்டு விட்டு சென்றனர். சில மணி நேரத்தில், கிராமவாசிகளின் கண்களில் பட்ட அந்த பெண், ஹாத்தரஸின் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். ஹாத்தரஸின் சண்ட்பா கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இதில் தாக்கூர் சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்ற புகார் நீண்டநாள்களாகவே இருந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். முதலில், அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் அது கொலை முயற்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் மேல் சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

க்ரைம்

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கை மற்றும் இரு கால்களும் செயலிழந்து விட்டன. நாக்கு துண்டிக்கப்பட்டதாலும், கழுத்து நெரிக்கப்பட்டதாலும் அவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை" என்றனர்.

இதையடுத்து, டெல்லியிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹத்ராஸ் கிராமத்திற்கு, அந்த பெண்ணின் உடல் நேற்று இரவே ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டது. இரவோடு இரவாக அந்த பெண் சடலத்துக்கு எரியூட்ட வேண்டும் என்று காவல்துறை வற்புறுத்தியதற்கு, அந்த பெண்ணின் குடும்பத்தார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Also Read: உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

இந்து முறைப்படி, தகனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையினரின் காலில் விழுந்து கெஞ்சிய போதும், ஆம்புலன்ஸை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்தும் இருக்கிறார்கள். ஆனால், அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி இல்லை என்று கறார் காட்டியிருக்கிறார்கள். இதனிடையே, இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஊருக்கு வெளியே அந்த இளம்பெண்ணின் உடல் அவசர அவசரமாக எரித்துள்ளனர் காவல்துறையினர்.

பெற்றோர்கள், மீடியா அனுமதியின்றி ஏன் அவசரமாக அப்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த, ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஸ்கர், ``பெண்ணின் குடும்பத்தினர் அனுமதியின்றி இறுதி சடங்கு நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை. இரவில் இறுதிச் சடங்குகளை நடத்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் ஒப்புதல் அளித்தனர். இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பெண்ணின் உடலை ஏற்றி வந்த வாகனம், அவரது கிராமத்தில் நள்ளிரவு 12:45 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகுதான், தகனம் நடைபெற்றது'' என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவசர அவசரமாக இளம்பெண்ணின் உடலைத் தகனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ``இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில உள்துறை செயலர் தலைமை வகிப்பார். ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கையை இந்தக்குழு அளிக்கும். வழக்கு விசாரணையை விரைவு நீதிமன்றத்தில் நடக்கும்'' எனக் கூறினார்.

``இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்" என்றும் யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில்,``பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், மாநில அரசு செய்து தர வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலமாக உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்,``இந்த சம்பவம் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் போட வேண்டும்'' என காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டர் பதிவில், ``வெறிச்செயலால் பாதிக்கப்பட்டு, உயிருக்காக போராடிய இளம்பெண் உயிரிழந்து விட்டார். உத்திரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகி விட்டது. பெண்கள் பாதுகாப்பில் ஒற்றுமை கிடையாது. குற்றவாளிகள் பகிரங்கமாக குற்றச் செயல்களை செய்கின்றனர். இளம்பெண் சாவுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கேள, நீங்கள்தான் உத்திரப்பிரதேச பெண்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு’' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ``பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, உ.பி போலீஸாரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆணையம் செய்யும்” என்றார்.

உ.பி-யில் உன்னாவ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இந்த இளம்பெண்ணின் மரணத்தால் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.



from Latest News https://ift.tt/3cIUnB8

Post a Comment

0 Comments