கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஜான் என்பவர் தனது மனைவி எஸ்தர், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளோடு களியக்காவிளை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெண் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. அந்த பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த களியக்காவிளை இன்ஸ்பெக்டர் எழிலரசி இதைப் பார்த்து குழந்தை அழுவதற்கு என்ன காரணம் என கேட்டுள்ளனர். அதற்கு அந்த தம்பதியினர் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் கூறியுள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் அவர்களுடன் வந்த சிறுவனை தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அதில், ``கடந்த 25 நாளுக்கு முன்னாடி பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில இருந்து அந்த குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து, நான்தான் கடத்தினேன்" எனக்கூறி அதிர வைத்தான் அந்த சிறுவன்.

இதையடுத்து அவர்களை களியக்காவிளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமி கர்நாடக மாநிலம் பெங்களூரில் காணாமல்போன குழந்தை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருவனந்தபுரம் காட்டாக்கடையைச் சேர்ந்த ஜோசப் ஜான் மற்றும் அவரது மூன்றாவது மனைவி எஸ்தர் ஆகியோர்தான் குழந்தைகளுடன் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிக்கியவர்கள். அவர்களுடன் வந்த எட்டு வயது சிறுவன் பெயர் ஜோபின். அந்த சிறுவன் ஜோசப் ஜானின் இரண்டாவது மனைவியின் மகன் எனக் கூறப்படுகிறது. அவர்கள் அழைத்து வந்த 5 வயது சிறுமியின் பெயர் ரோஹிதா. இந்த இரண்டு குழந்தைகள் பெயரிலும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். அது போலியாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
Also Read: பஞ்சாப்: `எனக்கு பயமில்லை!' திருடர்களை மடக்கி பிடித்த 15 வயது சிறுமி
இதற்கிடையில், கர்நாடகா மாநிலம் உப்பர்பேட்டா காவல் நிலைய எல்லைக்குள் காணமல்போன குழந்தை குறித்த புகைப்படம் அம்மாநில காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படமும் இந்த சிறுமியின் புகைப்படமும் ஒத்துப்போகிறது. எனவே, இதுகுறித்து கன்னியாகுமரி எஸ்.பி பத்திரி நாராயணன் கர்நாடக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக போலீஸாருடன் அந்தக் குழந்தையின் பெற்றோரான விஜயகுமார், கார்த்திகேஸ்வரி ஆகியோர் அங்கிருந்து களியக்காவிளைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்த பிறகுதான் முழு தகவலும் வெளியே வரும். இரண்டு குழந்தைகளும் நாகர்கோவில் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக போலீஸார், சிறுமி காணாமல்போனது குறித்து ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்துள்ளதால் களியக்காவிளை காவல் நிலையத்தில் தனியாக வழக்குப்பதிவு செய்யவில்லை" என்றனர்.
from Latest News https://ift.tt/3jneDuY
0 Comments