12 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்திய கலாசாரத்தின் தோற்றுவாய் மற்றும் பரிணாமம் குறித்து ஆராய்வதற்கான நிபுணர் குழுவை, மத்திய கலாசாரத் துறை அமைத்துள்ளது. இக்குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தமிழர்களின் மிகவும் தொன்மையான நாகரிகங்களை மறைப்பதற்காகவே மத்திய கலாசாரத்துறை இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்வதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கலாசாரத்தின் தோற்றுவாய் மற்றும் பரிணாமம் குறித்து ஆராய்வதற்கான நிபுணர் குழுவை மத்திய கலாச்சாரத்துறை நடுநிலையோடு அமைக்கவில்லை எனவும் வட இந்தியா மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனம் எழுந்தது.
இதுகுறித்து தனது ஆதங்கத்தைப் பதிவுசெய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக பிரதமர் மோடிக்குக் கடிதமும் எழுதினார்.
அக்கடிதத்தில், கலாசாரத் துறை அமைத்துள்ள நிபுணா் குழுவில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் இடம்பெறாமல் இருப்பதைக் குறிப்பிட்ட முதல்வர், இந்த விவகாரத்தில் தாங்கள் நேரடியாகவும், தனிப்பட்ட முறையிலும் தலையிட்டு நிபுணா் குழுவில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என பிரதமர் மோடியைக் கேட்டுக்கொண்டார். மேலும், ``ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுவினை மாற்றியமைத்து, அதில் தமிழகத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற அறிஞா் பெருமக்களைப் புதிய குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும்” என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
Also Read: `விந்தியமலைக்குக் கீழ் இந்தியா இல்லையா?’ - கலாசார ஆய்வுக்குழுவைக் கலைக்கக் கோரும் எம்.பி-க்கள்
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்,``இந்திய அரசு அமைத்துள்ள கலாசார ஆய்வுக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை பாராட்டுகிறேன். இந்தியாவின் மிகத் தொன்மைவாய்ந்த மொழி தமிழ் என்பதும், தமிழரின் பண்பாடும், நாகரிகமும் மிகத் தொன்மை வாய்ந்தவை என்பதைச் சிந்துவெளி அகழாய்வு முதல் கீழடி அகழாய்வு வரை எடுத்துக்காட்டியுள்ளன.
வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த உண்மைகளைப் புறக்கணிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர் எவருக்கும் இந்தக் குழுவில் இடம் அளிக்கப்படாததை வன்மையாகக் கண்டிக்கிறேன். மிகத் தொன்மை வாய்ந்த தமிழர் வரலாற்றினை மறைப்பதற்கான திட்டமிட்ட முயற்சியாகும் என்பதுடன், ஒட்டுமொத்தமாகத் தமிழர் நாகரிகத்தைப் புறக்கணிக்கும் செயலாகும். தமிழக முதலமைச்சரின் வற்புறுத்தலுக்கு இணங்க மத்திய அரசுக் குழுவில் தமிழரின் தொன்மையை அடியோடு மறைக்கும் சிந்தனைப் போக்குக் கொண்ட யாரும் இடம்பெற்றுவிடாமல் கண்காணிக்க வேண்டியது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கடமையாகும்'' என்று தெரிவித்தார்.
from Latest News https://ift.tt/2Gb29rO
0 Comments