https://gumlet.assettype.com/vikatan/2020-09/939912d4-10f1-4fdd-94ad-427434647867/IMG_20200928_WA0034.jpg``எங்களுக்கு இப்ப யாரும் இல்ல, அப்பத்தா மட்டும்தான்!" வயதான பாட்டியோடு தவிக்கும் சிறார்கள்

''வடக்க, தெக்கனு எல்லா பக்கமும் மதுரை சிட்டிதான். இந்த சாவடித் தெரு மட்டும்தான் இப்புடி கிராமம் மாதிரி தெரியுது'' என்றார் அந்தத் தெருக்காரர். அது, மதுரை மானகிரியில் உள்ள சாவடித் தெரு. இந்தத் தெருவில் வசிக்கும் தெய்வானைப் பாட்டிக்குக் கொஞ்சம் பார்வைக் குறைவு, செவித்திறன் முழுமையாக இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், தன் மூன்று பேரப்பிள்ளைகளை வேறு எந்த ஆதரவும் இல்லாமல் வளர்த்துவருகிறார்.

பூ கட்டும் குழந்தைகள்

'யார் இந்தப் பாட்டி? ஏன் இப்படி கஷ்டப்படுகின்றனர்?' எனப் பல கேள்விகளுடன் அந்தத் தெருவாசிகளிடம் விசாரித்தோம்.

''தெய்வானை பாட்டிக்கு 70 வயசு இருக்கும். இவங்களோட ரெண்டு மகன்கள்ல ஒருத்தர் இறந்துட்டாரு. இன்னொருத்தர் கொரோனா காலகட்டத்துல குடும்ப கஷ்டம் தாங்க முடியாம வீட்டைவிட்டு ஓடிட்டாரு. பாட்டியோட மூத்த மகனுக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை. இளைய மகனுக்கு ஒரு பெண் குழந்தை. பாட்டியோட மகன்தான் ஓடிட்டாருன்னா... மருமகள்களும் குழந்தைகளுக்கு ஆதரவா இல்லை. இவங்க குடும்பக் கதை ரொம்பப் பெருசு.

இந்த மூணு குழந்தைங்களும் பாவம், எதுவும் தெரியாம தவிக்குதுங்க. பாட்டிகிட்டதான் வளருதுங்க. தெய்வானை பாட்டிக்கு கவர்மென்ட்ல உதவித் தொகை கொடுக்குறாங்க. அதை வெச்சுதான் பிழைக்கிறாங்க. அக்கம் பக்கத்தில கொடுத்து உதவுறத வெச்சு குழந்தைகள பார்த்துக்குறாங்க. இந்தக் குழந்தைங்க பூ கட்டி வித்து, பாட்டிக்கு ஆதரவா இருந்துக்கிறாங்க.

குழந்தைகள்

பிஞ்சு வயசுல இப்படி வேலை செஞ்சு கஞ்சி குடிக்கிற இந்தப் பிள்ளைங்களப் பார்த்தா பாவமா இருக்கு. 10 வயசுக் குழந்தை மணிமேகலைதான் இருக்கிறதுலேயே பெரிசு. மத்த ரெண்டும் இன்னும் சின்னதுங்க. ஸ்வேதாக்கு 8 வயசு, கடைசியா இருக்குற பாண்டிக்கு 5 வயசுதான் ஆகுது.

அக்கம் பக்கத்துல நாங்க உதவி செஞ்சாலும் எத்தனை நாளைக்குத் தாக்குப்பிடிக்கும்னு தெரியல. இன்னும் கொஞ்சநாள்ல பள்ளிக்கூடமும் ஆரம்பிச்சுரும். இந்தக் குழந்தைங்க என்ன பண்ணப்போகுதுகன்னு தெரியலை. இந்த பாட்டியும் ரொம்ப முடியாமதான் இருக்காங்க. அரசாங்கம் குழந்தைகள நல்ல ஹோமுல சேர்த்து படிக்க வைக்கணும். அதுதான் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கிற நிரந்தர உதவியா இருக்கும்'' என்றனர்.

குழந்தை மணிமேகலை, "எங்களுக்கு இப்ப யாரும் இல்ல, அப்பத்தா மட்டும்தான். எங்க அப்பாக்கு போன் அடிச்சாலும் போக மாட்டீங்குது. கஷ்டத்த தீக்க பூ கட்டிக் விக்கிறோம். காலையில குடிக்கிற பாலுக்கு பக்கத்துல ஒரு வீட்டுல தண்ணி எடுத்து ஊத்துவோம். எங்க மேல பாவப்பட்டவங்க அப்ப அப்ப ஏதாச்சும் கொடுப்பாங்க. அப்பத்தாக்கும் சில நேரம் முடியாம போகுது. என்ன பண்ணப்போறோம்னு தெரியல" என்கிறாள் பாவமாக.

பாட்டியுடன் குழந்தைகள்

பாண்டி, ஸ்வேதா, மணிமேகலை இந்த மூன்று குழந்தைகளும் அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் வயதான தனது பாட்டியிடம் வாழ்கின்றனர். சொல்ல முடியாத சோகம் மனதில் இருந்தாலும் ஏதும் அறியா பிஞ்சுகள் நம் கேமராவுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்தனர். பாட்டியின் நிழலைத் தவிர, வேறு எந்த ஆதரவும் இல்லாமல் தவிக்கும் இந்தக் குழந்தைகளுக்கு அரசுதான் ஆதரவு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்தத் தெருவாசிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருக்கிறது.



from Latest News https://ift.tt/30mKqVb

Post a Comment

0 Comments