இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க-வின் ஆறு அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டிய ஜெ.பி.நட்டா, ``முன்னதாக சிறிய பாலங்கள் இருந்தபோது, ராணுவ லாரிகள் அவற்றைக் கடக்கும்போதெல்லாம் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும். ஆறு ஆண்டுகளில் மோடி அரசு 4,700 கி.மீ நான்கு வழிச்சாலை அமைத்து எல்லைப் போக்குவரத்தை பலப்படுத்தியிருக்கிறது’’ என்றார்.
இமாச்சலப் பிரதேசத்தில் அமையவிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆறு அலுவலகங்களுக்கு தலைநகர் டெல்லியிலிருந்து காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா எல்லைப் போக்குவரத்தில் மோடி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார்.
ஜெ.பி.நட்டா, ``பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆறு ஆண்டுகளில் லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு முதல் அருணாச்சலப்பிரதேசம் வரையிலான எல்லையில் 4,700 கி.மீ தூரம் நான்கு வழிச்சாலையை அமைத்துள்ளது.
இதேபோல், பெரிய அளவிலான ராணுவ பீரங்கிகள் கடந்து செல்லும் அளவுக்கு, எல்லையில் 14.7 கி.மீ நீளமுள்ள இரட்டை வழிப் பாலங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. இது இந்தியாவின் எல்லைப் போக்குவரத்தை வலுப்படுத்தி, சீனாவை அச்சுறுத்தியிருக்கிறது” என்று கூறினார்.
மேலும், முன்னதாக சிறிய பாலங்கள் இருந்ததாகவும், ராணுவ லாரிகள் அவற்றைக் கடக்கும்போதெல்லாம் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், தற்போது புதிய பாலங்கள் மூலம் பா.ஜ.க அரசு அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் கூறினார்.
சில நாள்களுக்கு முன்னர் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் எல்லைப் பகுதிச் சாலைகளுக்கான ஆணையம் (Border Roads Organisation) கட்டியிருக்கும் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கப்பாதையான `அடல்’ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்தத் திறப்புவிழாவின்போது, ஜெ.பி.நட்டா இமாச்சலப் பிரதேசத்துக்கு வர விரும்பியதாகவும், ஆனால் பீகார் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்பாடுகளில் இருந்ததால் வர இயலவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அடல் சுரங்கப்பாதை நாட்டின் பாதுகாப்புக்குப் பெருமளவு பயனளிக்கும் என்று ஜெ.பி.நட்டா கூறினார்.
from Latest News https://ift.tt/34lgRWh
0 Comments