அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யப்பிரகாசம் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ``தமிழக அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க விவசாயிகள் நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், விளைந்த நெல்லை வெயிலிலும் மழையிலும் போட்டு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழ்நாடு முழுதும் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். கொள்முதல் செய்யத் தாமதமானால் விவசாயிகள் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, நெல் கொள்முதல் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும்,``நெல் கொள்முதல் செய்ய தமிழகத்தில் எத்தனை கொள்முதல் நிலையங்கள் உள்ளன? கொள்முதல் நிலையங்களில் நெல்லை பாதுகாக்க என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன'' என்றனர்.
''தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சரியான நேரத்தில் விற்க முடியாமல் விவசாயிகள் வீதிகளில் இரவு பகலாக காத்துக் கிடக்கின்றனர். ஏகட்டட்ட சிரமத்துக்கிடையே வாழ்கிறார்கள். அது மட்டுமில்லாமல் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய ஒரு மூடைக்கு 40 ரூபாய் அரசு அதிகாரிகள் வாங்குவதாக அறிகிறோம். உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமலும், அப்படியே விற்பனை செய்ய அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது வேதனையானது." என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
Also Read: வேலூர்: `லஞ்சம் வாங்கத் தனி அலுவலகம்!’ - சுற்றுச்சூழல் அதிகாரி சிக்கியது எப்படி?
``தங்களது ஊதியத்தைத் தாண்டி அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமமாகும். கால தாமதத்தால் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லில் ஒரு நெல்மணி முளைத்தால்கூட சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலைய அதிகாரியிடம் அதற்கான பணத்தை வசூலிக்க வேண்டும்" என்று வேதனையுடன் கூறினர்.
இந்த வழக்கில் நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநரை எதிர் மனுதாரராக சேர்த்தும், இது சம்பந்தமாக அரசு தரப்பில் உடனே விளக்கம் அளிக்க உத்தரவிட்டும் வழக்கை 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
from Latest News https://ift.tt/3406OG2
0 Comments