வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அத்துமீறி பொது இடங்களில் ரகசியமாக கொட்டிச் செல்வது தொடர் நிகழ்வாகிவிட்டது.
ஊட்டி லாரன்ஸ் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கிவரும் கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை திறந்தவெளியில் வீசியதும், அவற்றை குரங்குகள் வனப்பகுதிளுக்குள் இழுத்துச் சென்ற காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல கொரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாதிரிகள், கூடலூர் பழைய பேருந்து நிலைய சாலையோரங்களில் வீசிச்சென்றது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது மட்டுமல்லாது கூடலூரின் ஐயன்கொல்லி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. சமீப காலமாக குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் செல்வது அதிகரித்துள்ளது. குன்னூர் நகராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில், குன்னூர் மௌண்ட் ரோடு அருகில் உள்ள கூட்டுறவு வங்கி அருகில் மருத்துவ கழிவுகளை கொட்டியிருப்பதை கண்டறிந்தனர். விசாரணை மேற்கொண்டதில் தனியார் கிளினிக் இப்படி ஒரு செயலில் ஈடுப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிளினிக் நடத்திவரும் மருத்துவர்கள் ரவிச்சந்திரன் மற்றும் நித்தியா ஆகிய இருவருக்கும் அபராதம் விதித்தனர்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய குன்னூர் நகராட்சி அதிகாரிகள், "பொதுவெளியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளில் கிளினிக்கின் மருந்து சீட்டுகளும் இருந்தன. இதனை சம்பந்தப்பட்ட தனியார் கிளினிக்களுக்குச் சென்று விசாரணை நடத்தினோம்.
பொது சுகாதாரத் திட்டம் மற்றும் திறந்த வெளியில் மருத்துவக் கழிவு கொட்டு தடுப்பு விதி ஆகியவற்றின் கீழ் இரண்டு டாக்டர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றனர்.
மக்கள் செயற்பாட்டாளரான ஊட்டி ஜனார்த்தனன், "அபாயகரமான மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற எந்த பொறுப்பு உணர்வும் இல்லாமல் அப்பாவி பொதுமக்களும் கால்நடைகள் மற்றும் வன விலங்குகள் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் இது போன்ற நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
from Latest News https://ift.tt/3dOkRSn
0 Comments