`நான் எந்த கூட்டம் நடத்தினாலும் வருவது கிடையாது. எந்த விஷயங்களைச் செய்தாலும் அதில் குத்தம் சொல்லுகிறார்கள். தற்பொழுது கூட நான் செய்யாத தவறுகளைச் செய்தாக ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார்கள்' என்றும் `பட்டியலினத்தைச் சேர்ந்தவள் என்பதால் வேண்டுமென்றே என் மீது பழி சுமத்துகிறார்கள்’ என்றும் ஊராட்சி தலைவர்கள் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் பெருக மணி ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளது. இதில் ஊராட்சித் தலைவராக இருப்பவர் கிருத்திகா அருண்குமார். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் ஊராட்சியில் எட்டாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் செந்தில்குமார், இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில் பெருகமணி ஊராட்சியில் சாக்கடை தூர் வாராமல் உள்ளதாகவும், நல்ல முறையில் இருக்கும் மின் மோட்டார்களை பழுது நீக்கியதாக ஊராட்சி தலைவர் கிருத்திகா லட்சக்கணக்கில் ஊழல் செய்து வருகிறார் என்றும், இதுபற்றி முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று ஊராட்சித் தலைவர் கீர்த்திகா, ஊராட்சி மன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
என்ன நடந்தது என்று கிருத்திகாவிடம் பேசினோம். ”என் மீது ஆதாரமற்ற குற்றங்களைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள். நான் எந்த கூட்டம் நடத்தினாலும் வருவது கிடையாது. எந்த விஷயங்களைச் செய்தாலும் அதில் குற்றம் சொல்லுகிறார்கள். இப்போது கூட நான் செய்யாத தவறுகளைச் செய்தாக கலெக்டரிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தவர்கள் அவர்கள் என்னிடம் நேரடியாக இதுபற்றி கேட்டிருந்தால் எல்லா விவகாரத்தையும் தெளிவாகச் செல்லியிருப்பேன். நான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால் வேண்டுமென்றே என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள். இவர்களின் செயல்பாடுகளால் பலநலத்திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது. இவர்கள் கொடுக்கும் டார்சரால் என்ன வேலை செய்யமுடியவில்லை இதனால் தான் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டேன்” என்றார்.
இவ்விவகாரம் கேள்விப்பட்டதும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா நேரில் சென்று கிருத்திகாவின் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கூட்டத்திற்கு உறுப்பினர்களை அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாகவும், இல்லாவிட்டால் இவ்விவகாரம் பற்றி ஆட்சியரிடம் தகவலைத் தெரியப்படுத்தச் சொல்லியிருக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட கிருத்திகா உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
from Latest News https://ift.tt/34jFvqn
0 Comments