https://gumlet.assettype.com/vikatan/2020-10/bcaa2cc3-9336-46cd-8815-e88ea31b7e09/vlk_1.jpgதூத்துக்குடி: கட்சிக்கொடி ஏற்றுவதில் போட்டி! - தி.மு.க., அ.தி.மு.கவினர் மோதல்; தடியடியால் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மார்கண்டேயன். அ.தி.மு.கவில் இருந்தபோது எம்.எல்.ஏவாக இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின் போது நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால். அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் இவருக்குமான மோதலால், தன் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பனுக்கு சீட் பெற்றுக் கொடுத்தார்.

தி.மு.க கொடியேற்றிய கீதாஜீவன்

இதனால், அதிருப்தி அடைந்த மார்கண்டேயன், கட்சியில் தான் வகித்து வந்த மாநில செய்தித்தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியிலிருந்தும் விலகினார். இடைத்தேர்தலிலும் சுயேச்சையாகப் போட்டியிட்டு 27,456 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்று தன் பலத்தை காண்பித்தார். தொடர்ந்து, எந்தக் கட்சியிலும் சேராமல் அரசியலைவிட்டு விலகியே இருந்தார். இந்நிலையில், தி.மு.கவில் இணைய கடந்த சில மாதங்களாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளரான கே.என்.நேரு மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார். தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், விளாத்திகுளத்தில் தனது பண்ணையில் உள்ளூர் தி.மு.கவினரை அழைத்துக் கூட்டங்களை நடத்தி வந்தார் மார்கண்டேயன். தி.மு.கவில் இணைந்தபிறகு, விளாத்திகுளம் பேரூராட்சிப் பேருந்து நிலையத்தின் முன்பு உள்ள தி.மு.க கொடிக்கம்பத்தில் நேற்று மாலை கொடியேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் மார்கண்டேயன்.

பாதுகாப்பில் போலீஸார்

தி.மு.க வடக்கு மாவட்டப் பொருப்பாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் கொடி ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், விளாத்திகுளம் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏவான சின்னப்பனின் ஆதரவாளர்கள், மார்கண்டேயன் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அதே நேரத்தில் அ.தி.மு.க.,கட்சிக் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கும்படி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் பால்ராஜ் தலைமையிலான நிர்வாகிகள் போலீஸாரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

‘தி.மு.கவினரின் கொடியேற்ற நிகழ்ச்சியின்போது உங்களுக்கும் அனுமதி கொடுத்தால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும்” எனச் சொல்லி அனுமதி மறுத்துள்ளனர். தி.மு.கவினருக்கு போலீஸார் அளித்த நேரப்படி 5 மணிக்கு நிகழ்ச்சியை துவக்கினார்கள். அப்போது திடீரென தன் ஆதரவாளர்களுடன் பேருந்து நிலையம் அருகில் வந்த எம்.எல்.ஏ சின்னப்பன் மற்றும் ஆதரவாளர்கள் அ.தி.மு.க கம்பத்தில் கொடியேற்ற முற்பட்டனர். அப்போதும் போலீஸார் அனுமதி மறுத்தனர்.

மார்கண்டேயன் - கீதாஜீவன்

உடனே, அனுமதி மறுத்த போலீஸரைக் கண்டித்து எம்.எல்.ஏ சின்னப்பன் தலைமையிலான அ.தி.மு.கவினர் சாலைமறியலில் ஈடுபட்டதுடன் `துரோகி மார்கண்டேயன் ஒழிக’ எனவும், அனுமதி மறுத்த போலீஸாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். கொடியேற்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு தி.மு.கவினர் வெளியேறிய போது அ.தி.மு.க., தி.மு.கவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். எம்.எல்.ஏ சின்னப்பனுக்கு லேசாய காயம் ஏற்பட்டது. அ.தி.மு.கவினர் சிலரும் போலீஸாரை தாக்கினர்.

இதையடுத்து ஏ.டி.எஸ்.பி கோபி பேச்சுவார்த்தை நடத்தினார். தகவலறிந்து நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீண்குமார் அபிநபு பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அ.தி.மு.க கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார் சின்னப்பன். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பதற்றம் நிலவியது. என்ன நடந்தது என தி.மு.கவினர் சிலரிடம் பேசினோம்,

போலீஸார் தடியடி

“மார்கண்டேயன் தி.மு.கவுல சேர்ந்த பிறகு விளாத்திகுளத்துல முதல் நிகழ்ச்சியா பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல கொடியேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சார். இந்த நிகழ்ச்சிக்காக மூணு நாளுக்கு முன்னாலயே விளாத்திகுளம் ஸ்டேஷன்ல முறையா அனுமதி வாங்கிட்டோம். இதைக்கேள்விப்பட்ட எம்.எல்.ஏ., சின்னப்பன் வீம்புக்கு திடீர்னு அவரும் அதே இடத்துல கொடியேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுறார்.

காலையில, ’நாங்களும் கொடியேத்தப் போறோம்’னு சொல்லி போலீஸ்ட்ட அ.தி.மு.கவினர் அனுமதி கேட்டதற்கு போலீஸார் அனுமதி கொடுக்கலை. போலீஸார் அனுமதி கொடுத்த 5 மணிக்கே நாங்க நிகழ்ச்சியை துவக்கிட்டோம். அந்த நேரத்துல தன்னோட ஆதரவாளர்களோடு அ.தி.மு.க கொடியேத்த முயன்றார். அப்போதும் போலீஸார் அனுமதி மறுத்தாங்க. ஆனா, வேணும்னே அத்துமீறி கொடியேத்த முயன்றார். அப்போது எங்களிடம் அ.தி.மு.கவினர் வாக்குவாதம் செஞ்சாங்க.

போலீஸார் தடியடி

மோதல் ஏற்பட்டிறக் கூடாதுன்னு போலீஸார் தடுத்தாங்க. அ.தி.மு.கவினர் போலீஸாரையே தாக்க முயன்றபோது லேசா தடியடி நடத்தினாங்க. கடந்த 16-ம் தேதி சனிக்கிழமைதான் அ.தி.மு.க 49வது ஆண்டு துவக்க விழாவுக்காக அதே இடத்துல எம்.எல்.ஏ சின்னப்பன் தலைமையில அமைச்சர் கடம்பூர்ராஜூ கொடியேற்றினார். அஞ்சாவது நாளே திரும்பவும் அதே இடத்துல கொடியேற்ற வேண்டிய அவசியம் என்ன? அண்ணன் தி.மு.கவுல சேர்ந்து முதல் நிகழ்ச்சியா கொடியேத்துறார்னு தெரிஞ்சு பிரச்னை பண்ணணும்னுதான் சின்னப்பனும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சிருக்கார்” என்றனர்.

போராட்டம், சாலைமறியல், தடியடிக்கு மத்தியில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள 5 டீக்கடைகளில் மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை டீ, வடை தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என மார்கண்டேயன் தரப்பு மைக்கில் அறிவித்தது. பதிலுக்கு, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மற்ற 4 டீக்கடைகளில் அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் டீ, வடை சாப்பிட்டுச் செல்லலாம் என எம்.எல்.ஏ சின்னப்பன் தரப்பும் பதிலுக்கு அறிவித்தது. இரு தரப்பில் எங்கு சென்று டீ சாப்பிடுவது என குழம்பிப் போயினர் மக்கள். அதிலும், வடை சூடாக போடப்பட்ட கடையில்தான் மக்கள் கூட்டம் நிரம்பியது.



from Latest News https://ift.tt/35nHB88

Post a Comment

0 Comments