இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், `சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்’ என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 800 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் இவர். இதன் காரணமாக இவரின் பயோபிக் திரைப்படத்துக்கு `800' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையாகவைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஶ்ரீபதி இயக்குகிறார். முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.
`ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் கொன்றுகுவித்த நாடான இலங்கையின் தேசியக்கொடி கொண்ட கிரிக்கெட் ஜெர்ஸியை எப்படி விஜய் சேதுபதி அணிந்துகொண்டு நடிக்கலாம்?' என்று கேள்விகளை எழுப்பி நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்பையும் ட்விட்டரில் பதிவு செய்துவருகின்றனர். தமிழ்த் திரைப்படதுறையைச் சேர்ந்த பலரும் விஜய் சேதுபதி இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
Also Read: விஜய் சேதுபதியை, ஏன் முரளிதரன் விலகச் சொன்னார்?! - `800’ பட சர்ச்சை குறித்து பெ.மணியரசன்
இந்த நிலையில் முரளிதரன் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்தார். `விஜய் சேதுபதி அவர்களின் கலைப் பயணத்தில், வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார் முரளிதரன். அதன் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகி கொண்டார்.
இந்த சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து, மர்ம நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆபாச கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டப்பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அந்த நபர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முந்தினம், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், `விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்ற தகவலை வெளியிட்டார். கலகத்தை தூண்டுதல், ஆபாச கருத்து பதிவிடுதல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், விஜய்சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது ஐ.பி முகவரி மூலம் சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இண்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ளவரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
from Latest News https://ift.tt/35k9LRf
0 Comments