https://gumlet.assettype.com/vikatan/2020-11/0ec8de1e-77fe-49d4-b86b-0a55b7fa83b9/AP20332556340844.jpgவிவசாயிகள் போராட்டம்.. ஜந்தர் மந்தரில் அனுமதி இல்லை! - டெல்லியை இணைக்கும் சாலைகளை முடக்க திட்டம்

மத்திய அரசால் அமல்படுத்தப்படவுள்ள புதிய விவசாய சீர்திருத்த மசோதாவினை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்பினர் தங்களின் கண்டன குரல்களை முன்னிறுத்தி வருகின்றனர்.

இது குறித்த அறிவிப்பு வெளியான தொடக்க நாளிலிருந்தே பஞ்சாப் மாநிலத்தில் ஒரு புறம் விவசாயிகள் பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மறுபுறம், பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிலர் விவாசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்கள் பதவியினை ராஜினாமா செய்தனர். இச்செயல்கள் பஞ்சாப் மாநிலத்தின் பா.ஜ.க. நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் தொடங்கி டெல்லி வரை பேரணியாக சென்று போராட்டத்தினை நிகழ்த்த அகில இந்திய விவசாயிகள் அமைப்பு முடிவு செய்து அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் 30க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து வர்ணக்கொடிகளுடனும், ட்ராக்டர், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் பேரணியாக கிளம்பி கடும் குளிரையும் பொருட்படுத்தாது முன்னேறி வருகின்றனர்.

Also Read: புதிய வேளாண் சட்டங்கள்: அடக்குமுறைக்கு அஞ்சாத விவசாயிகள் போராட்டம்- இறங்கி வருமா மோடி அரசு?

கடந்த வியாழனன்று, ஹரியானா மாநிலத்தின் எல்லையில் பேரணி சென்ற விவசாயிகளை மறித்து போலீஸார் தடியடி நடத்தினர். அதனைத் தொடர்ந்து, விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் போராட்டத்தை தொடர அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தினை மாநில எல்லையின் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளவதால் போக்குவரத்து பாதிக்கப்படும். அதனால் போராட்டத்தினை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள டெல்லி புராரி பகுதியிலுள்ள நிரங்கரி சமகம் மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று விவசாயிகள் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், போராடக் குழுவினர் இதற்கு மறுப்பு தெரிவித்து டெல்லி எல்லைக்கு வெளியே தங்கள் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய கிசான் அமைப்பின் முக்கிய நிர்வாகியான ஜோகீந்தர் சிங், “மாநில எல்லைகளில் போராட்டங்களை நிகழ்த்துவதால் ஏற்படும் இடஞ்சல்கள் குறித்து எங்களுக்கும் தெரியும். ஆனால், டெல்லி மாநகரில் வழக்கமாக போராட்டங்கள் நிகழும் இடமான ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நிகழ்த்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், உள்த்துறை அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்து புராரி பகுதியில் இடம் ஒதுக்கியுள்ளது. அதனால் எங்கள் அமைப்பினரிடம் முழுமையாக ஆலோசித்த பின்னரே முடிவெடுப்போம். எங்கள் குழுவில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் இதுவரை மாநில எல்லையை வந்தடையாததால் தாமதமாகும் என்று தெரிகிறது” என்றார்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் இப்போராட்டம் குறித்து விவாதிக்க கடந்த வெள்ளிகிழமையன்று டெல்லி விரைந்த பஞ்சாப் அமைச்சரவைச் சேர்ந்த சுர்ஜித் குமார் ஜியானி, மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்பிற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜித் குமார் ஜியானி, “இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முழுஉரிமை உண்டு. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பாதுகாபிற்காகவும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துகொள்ளும் விதமாகவும் புராரி பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில், இப்போராட்டத்திற்கு அரசாங்கத்திடமிருந்து நல்ல வகையில் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

எல்லையில் போலீஸாரின் தாக்குதல்களை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர்களுள் ஒரு சில குழுவினர் ஏற்கனவே புராரி பகுதியை அடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Also Read: முட்டிமோதும் விவசாயிகள், ஒடுக்கும் அரசு... டெல்லி போராட்டத்தில் என்ன நடக்கிறது? #DelhiChalo

இதனிடையே, ராம்லீலா மைதானத்திற்கு பதிலாக, நிரங்கரி மைதானத்தை ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள், டெல்லியின் எல்லையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தலைநகரான டெல்லியுடன் குருகிராம், காஜியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவற்றை இணைக்கும் மூன்று முக்கிய நெடுஞ்சாலைகளை மறியல் மூலம் முடக்க திட்டமிட்டுள்ளனர். நேற்று வரை, சிங்கு எல்லை மற்றும் திக்ரி எல்லைகள் மட்டுமே விவசாயிகளால் தடுக்கப்பட்டது.



from Latest News https://ift.tt/33w3H8m

Post a Comment

0 Comments