தோகைமலை காவல்நிலையத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் காலி இடத்தை சீரமைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மழை வளத்தை பெருக்கவும் ஏதுவாக 20 வகையான 250 மரக்கன்றுகளை நட்டு, அங்குள்ள காவலர்கள் குறுங்காட்டை அமைத்து, அதை பராமரிக்கத் தொடங்கியிருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

கரூர் மாவட்டம், தோகைமலை காவல்நிலையத்துக்குச் சொந்தமாக 3 ஏக்கர் இடம் உள்ளது. இதில், தோகைமலை காவல்நிலையம், காவலர் குடியிருப்புகள் தவிர்த்து காலியாக நிறைய இடம் இருக்கிறது. இந்த இடத்தில் முட்புதர்கள் மண்டிபோய், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து, அங்குள்ள காவலர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தோகைமலை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில், சிறப்பு எஸ்.ஐ-க்கள், மகளிர் காவலர்கள், காவலர் குடியிருப்பினை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, இந்த இடத்தை சீரமைப்பது குறித்து ஆலோசித்தனர்.
Also Read: முதன்மைப் பயிர் மாப்பிள்ளை சம்பா, ஊடுபயிராக அறுபதாம் குறுவை... கரூர் விவசாயியின் புது முயற்சி!
அதனடிப்படையில், அந்த முட்புதர்கள் மண்டிய இடத்தை சீரமைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மழை வளத்தை பெருக்கிடவும் வழிவகை செய்ய முடிவெடுத்தனர். முதல்கட்டமாக, அந்த இடத்தை சீரமைத்தனர். அதன்பிறகு, தங்கள் சொந்தப் பணத்தில் செம்மரம், தேக்கு, அத்தி, மாமரம், வாகை, வில்வம், வேங்கை, நாவல் உள்பட 20 வகையான, 250 மரக்கன்றுகளை வாங்கி, அந்த இடத்தில் நட்டனர். இம்மரக்கன்றுகளை தோகைமலை காவல்நிலையத்தில் உள்ள போலீஸார் மற்றும் காவலர் குடியிருப்பில் வசிக்கும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் சேர்ந்து, தினந்தோறும் 250 மரக்கன்றுகளை, குடியிருப்பு மற்றும் வெளியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி, வளர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து, தோகைமலை காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம்.
"ஜெகதீசன் சார் இங்க பணிக்கு வந்ததில் இருந்து, பல நல்ல விசயங்களை முன்னெடுத்து வருகிறார். தெருவில் சுற்றித்திரியும் மனசவால் கொண்ட மனிதர்களை மீட்டு, அவர்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைக்க வழி ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், தோகைமலை காவல் நிலைய போலீஸாருக்கும், குடியிருப்பில் இருக்கும் எங்கள் உறவினர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்திய புதர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
அதோடு, அந்த இடத்தில் எங்களை வைத்து 250 மரக்கன்றுகளை நடவைத்தார். தொடர்ந்து, மரக்கன்றுகளுக்கு, சாரின் ஆலோசனையின் பேரில் தண்ணீர் ஊற்றி வருகிறோம். இந்தப் பகுதி வறட்சியான பகுதி. கோடைக்காலத்தில் மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதனால், தோகைமலை காவல்நிலையத்தின் பின்புறம் தூர்ந்து போன நிலையில் கேணி ஒன்று உள்ளது. இதனை தூர்வாரி சீரமைத்து, போர்வெல் வசதியினை பெரம்பலூர் தொகுதி எம்.பி பாரிவேந்தர், குளித்தலை எம்.எல்.ஏ ராமர், தோகைமலை யூனியன் சேர்மன் லதா ரெங்கசாமி, காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகத்தினர் யாரேனும் செய்துதர வேண்டும். அப்போதுதான், இந்த 250 மரக்கன்றுகளையும் மரங்களாக்கி, இந்தக் குறுங்காட்டை சிறப்பாக வளர்த்தெடுக்க முடியும்" என்றார்கள்.
from Latest News https://ift.tt/3qgr53w
0 Comments