கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 8, 10 மற்றும் 14-ம் தேதிகளில் மூன்று கட்டமாக நடக்கவிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் கேரளத்தில் களைகட்டி வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என அனைத்து உள்ளாட்சிகளுக்குமான தேர்தலில் 50% பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கல்லூரி மாணவிகளில் தொடங்கி இளம் பெண்கள்வரை 20 வயதுகளில் உள்ள பலர் களம் இறங்கியுள்ளனர். சி.பி.எம், காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளிலும் இளம் பெண்களுக்கு அதிகளவு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சில பெண் வேட்பாளர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் ஓட்டுக்கேட்டு பதிவு செய்யும் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள அவர்களின் படங்கள், 'கேரள தேர்தலில் இத்தனை இளம் பெண்களா' என்று அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, சில விஷமிகள், தேர்தலில் போட்டியிடாத சில இளம் பெண்களின் புகைப்படங்களையும், அவர்கள் கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகக் கட்சிகளின் லோகோவுடன் போஸ்டர்கள் தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அந்தப் போஸ்ட்களில், 'கேரளாவில் தேர்தல் நடக்கிறதா உலக அழகிப் போட்டி நடக்கிறதா?' என்பது முதல், 'பஞ்சாயத்து மாறி வேறு பஞ்சாயத்தில் ஓட்டுப்போட முடியுமா?' என்பதுவரை விரும்பத்தகாத கமென்ட்கள் விழுகின்றன.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் இளம் பெண்கள் அதிக அளவு போட்டியிடுவதற்கு அனைத்துக் கட்சிகளும் வாய்ப்பளித்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயம். திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிகளிலும் இளம் பெண்கள் அதிகமாகப் போட்டியிட்டுவருகின்றனர்.
திருவனந்தபுரம் மாநகராட்சி பாப்பனங்கோடு வார்டு கவுன்சிலராக போட்டியிடுகிறார் பா.ஜ.க இளைஞரணி மாவட்டச் செயலாளர் ஆஷாநாத். கேரள மாநிலத்தில் அதிக அளவு இளம் பெண்கள் போட்டியிடுவது குறித்து ஆஷாநாத்திடம் பேசினோம். "கேரள உள்ளாட்சித் தேர்தலில் இளம் வயது பெண் வேட்பாளர்கள் நிறைய பேர் களம் இறங்கியிருக்கிறோம். சமுதாயத்தை பாதிக்கும் என்ன விஷயமாக இருந்தாலும் அதற்கு முதலில் எதிர்வினை எழுவது இளைஞர்களிடம் இருந்துதான். அரசியலில் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்ற கனவு இளைஞர்களிடம் உண்டு. அதனால்தான் இந்தத் தேர்தலில் இளைஞர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.
இளைஞர்கள் வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு. இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் சின்னச் சின்ன பிரச்னைகளையும் கவனித்து வருகிறார்கள். சாலை சீரமைத்தல் போன்றவை குறித்து முதலில் குரல்கொடுப்பதும் இளைஞர்கள்தான்.
அதனால்தான் பா. ஜ.க. அதிக அளவு இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. பா.ஜ.க மட்டுமல்லாது அனைத்துக் கட்சிகளும் இளைஞர்களை முன்னிறுத்தியுள்ளன. திருவனந்தபுரத்தில் போட்டியிடுவதில் அதிகமானோர் இளைஞர்கள்தான். ப.ஜ.க-வில் இளைஞர் வேட்பாளர்கள் அதிகம்" என்றார்.
கேரள உள்ளாட்சியில் அனைத்துக் கட்சிகளிலும் இளம் பெண்கள் பலர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பது மாநிலம் தாண்டியும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News https://ift.tt/2KKBJis
0 Comments