https://gumlet.assettype.com/vikatan/2020-12/c17fb7d4-41bf-4878-b14c-86abd2752f12/IMG_20201230_142723.jpgகேரளா: பெட்ரோல் ஊற்றிக்கொண்ட தம்பதி, லைட்டரைத் தட்டிவிட்ட போலீஸ்... நிராதரவான பிள்ளைகள்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றங்கரை அதியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்த வசந்தா என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. ராஜன் தனது இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக வசந்தா நெய்யறின்கரை முனிசிபல் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் முடிவில் நீதிமன்றத் தீர்ப்பு ராஜனுக்கு எதிராக வந்தது. இதனை தொடர்ந்து வழக்கறிஞர்கள் குழு மற்றும் போலீஸார் ராஜனின் வீட்டை ஜப்தி செய்யச் சென்றுள்ளனர்.

அதிகாரிகளை தடுத்த ராஜன், தான் மேல் முறையீடு செய்யவும், தீர்ப்புக்கு ஸ்டே வாங்கவும், மாற்று வீடு தேடவும் கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ராஜன் தன் மீதும் தன் மனைவி அம்பிளி மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

ராஜனின் வீடு

ராஜன் தன் மனைவியை சேர்த்துப் பிடித்துக்கொண்டு, பாக்கெட்டில் இருந்து லைட்டரை எடுத்துத் தீக்குளிக்கப் போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் ராஜனின் கையில் இருந்த லைட்டரை தட்டிவிட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக லைட்டரில் இருந்து வெளியான தீப்பொறி ராஜன் மற்றும் அவரின் மனைவி அம்பிளி மீது பற்றியது. இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி முதலில் ராஜனும், பின்னர் அம்பிளியும் உயிரிழந்தனர்.

அவர்கள் உடலில் தீப்பிடித்த சிறிது நேரத்திலேயே, நெய்யாற்றின்கரை முனிசிபல் கோர்டின் உத்தரவுக்கு தடை விதித்து, ஹைகோர்ட்டில் ஆர்டர் வந்துள்ளது. ஆனால், விதி அந்தத் தம்பதியின் உயிரை எடுத்துக்கொண்டுவிட்டது. ராஜன்- அம்பிளி தம்பதியின் மகன்கள் ரஞ்சித்தும், ராகுலும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

"அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இப்படி ஒரு கோர முடிவு ஏற்பட்டுவிட்டது, நாங்களும் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்று மார்ச்சுவரி முன்பு நின்று ரஞ்சித்தும், ராகுலும் தேம்பித்தேம்பி அழுதது காண்போரை கலங்க வைத்தது. இந்த நிலையில், அம்பிளியின் உடல் வந்த ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

கைது செய்யப்பட்ட வசந்தா

ராஜன் இறப்பதற்கு முன்பு தன் மகன்களிடம், 'நான் இறந்தால் இந்த வீட்டின் முன் என்னை அடக்கம் செய்ய வேண்டும்' எனக் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ராஜன் மற்றும் அம்பிளி ஆகியோரது உடல் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முதலில் இறந்த ராஜனின் உடலை அடக்கம் செய்வதற்காக அவரின் மகன் குழி எடுக்கும்போது போலீஸார் தடுத்தனர். "என் அப்பாவை கொன்றீர்கள். அவரது உடலை அடக்கம் செய்யவும் விடமாட்டீர்களா?" என அவர் கொந்தளித்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.

இதைத் தொடர்ந்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ராஜனின் வீட்டுக்குச் சென்று அவரின் இரண்டு பிள்ளைகளையும் சந்தித்து ஆறுதல் கூறினார். ராஜனுக்கு எதிராகப் புகார் அளித்த வசந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வசந்தா வீடு முன்பு போராட்டம் நடத்தினர். வசந்தா கைது செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கை காப்பதற்காக கைது நடவடிக்கை எடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து வசந்தா கூறுகையில், "நான் ஒரு குற்றமும் செய்யவில்லை, சட்டத்தின் வழியில்தான் செல்கிறேன். அது என்னுடைய இடம். வேறு காரியங்களுக்கு வேண்டுமானால் நான் அந்த சொத்தை கொடுப்பேன்.

ராஜனின் மகன்கள் ராகுல் - ரஞ்சித்

ஆனால், ரவுடியிஸம் காட்டியவர்களுக்கு நான் இடத்தை கொடுக்கமாட்டேன். ராஜனின் குடும்பத்திற்கு அந்த இடத்தை கொடுக்க வேண்டுமானால் அது என் மரணத்திற்கு பிறகே நடக்கும்" என்றார்.

வசந்தாவின் மீது கோபத்தில் இருக்கும் மக்கள், தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சொல்லும் ஒருவரின் பாதுகாப்பு பற்றிய குறைந்தபட்ச அக்கறை, அந்தச் சூழலுக்கு உரிய நிதானம்கூட இல்லாமல் லைட்டரை அவரிடமிருந்து பறிக்கச் சென்ற காவலரையும் சாடிவருகின்றனர். மேலும், ராஜன் நீதிமன்ற தடை ஆணை கிடைப்பதற்கான அவகாசம் கேட்டும் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள ரஞ்சித், ராகுல் ஆகியோருக்கு வீடு வழங்குவதாகவும், அவர்கள் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ரஞ்சித் மற்றும் ராகுலின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாக ஏற்கெனவே சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஆதரவில்லாமல் தவிக்கும் பிள்ளைகளுக்கு முதல்வர் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

இறந்த ராஜன்-அம்பிளி மற்றும் ரஞ்சித், ராகுல்

இதுகுறித்து ரஞ்சித் மற்றும் ராகுல் கூறுகையில், "அரை மணிநேரம் காத்திருந்தால் ஹைகோர்ட் தடை ஆணை கிடைத்திருக்கும். என் பெற்றோர் மரணத்திற்கு வசந்தாவும், போலீஸுமே காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார். கேரள அரசு ஆதரவு கரம் நீட்டியதற்கு நன்றி. அம்மாவும், அப்பாவும் வாழ்ந்த இந்த மண்ணில் எங்களுக்கு வீடுகட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இந்த இடத்தில் வசிக்கவே நாங்கள் விரும்புகிறோம்" என்றனர்.

3 சென்ட் இடப் பிரச்னைக்கு இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளது துயரம்.



from Latest News https://ift.tt/34Xuprb

Post a Comment

0 Comments