உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அஞ்சலத்தில் நிழலுலக தாதா சேட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கியின் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தபால்தலைகள் `மை ஸ்டாம்ப்’ எனும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் நாம் நம்முடைய அல்லது நமது உறவினர் மற்றும் நண்பர்களின் புகைப்படத்தை அச்சிட்டு தபால் தலைகளாகப் பெற்றுக்கொள்ளலாம். இதற்குக் குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்படும்.
இந்த திட்டத்தில் தபால்தலை வெளியிடக் கொடுக்கப்படும் புகைப்படங்கள் பல்வேறு வரம்புகளுக்கு உட்படவேண்டும் என்ற விதி உள்ளது. அடையாளச் சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். அனைத்தும் ஆராயப்பட்டு பின்னரே, தபால் தலை தயாரிக்கப்படும். இரண்டு குற்றவாளிகளின் புகைப்படங்கள் தபால்தலைகளாக அச்சிடப்பட்டது எப்படி, என்பது குறித்து அஞ்சல்துறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருவரும் குற்றவாளிகள் என்பது தெரியாமல் அச்சிடப்பட்டதா? இதற்குக் காரணமாவார்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read: நிழலுலகத் தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை! யார் இந்த சோட்டா ராஜன்?
முதற்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இந்த இரண்டு தாதாக்களின் புகைப்படங்களைத் தபால் தலையாக அச்சிடக் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்குக் கட்டணமாக 600 ரூபாய் செலுத்தியுள்ளார். கொடுக்கப்படும் புகைப்படங்களை நிராகரிக்கும் முழு உரிமையும் தபால் துறைக்கு இருக்கும் நிலையில், தாதாக்களின் படம் தபால் தலையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயல் மூலம் அஞ்சல்துறையின் அலட்சியம் அம்பலமாகியுள்ளது.
நிழலுலக தாதா என்றழைக்கப்படும் சோட்டா ராஜன் தற்போது மும்பை சிறையில் இருக்கிறார். மற்றொருவரான பஜ்ரங்கி, உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் சிறையில் கடந்த 2018-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
``இருவரின் உறவினர் என்று ஒருவர் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் இருவரின் பெயரும் `பிரேம் பிரகாஷ் சிங் (எ) முன்னா பஜ்ரங்கி’ மற்றும் `ராஜேந்திர நிகால்ஜே (எ) சோட்டா ராஜன்’ என்று நிரப்பப்பட்டுள்ளது. சரியான ஆவணங்களை வாங்காமல் ஊழியர் ஒருவர் 12 தபால்தலைகளை அச்சிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று உ.பி அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்.
from Latest News https://ift.tt/34ReieL
0 Comments