மெக்ஸிகோவில் திருமணமான நபர் ஒருவர், தனது காதலியின் வீட்டுக்கு ரகசிய சுரங்கப்பாதை அமைத்து, காதலியின் கணவரிடம் சிக்கிக் கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பெருவில் கூகுள் மேப்ஸ் (Google Maps) வசதியைப் பயன்படுத்திய நபர் ஒருவருக்கு அது தனிப்பட்ட சோகமாக மாறியது. பெருவைச் (Peru) சேர்ந்த கணவர் ஒருவர், நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள பிரபலமான பாலத்தை அடைவதற்கான பாதையைக் கண்டுபிடிக்க கூகுள் மேப்ஸைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். வெவ்வேறு பாதைகளைக் கண்ட அவர், கூகுள் மேப்ஸின் ஸ்ட்ரீட் வியூ (Street View) அம்சத்தைப் பயன்படுத்தத் தேடத் தொடங்கியிருக்கிறார்.
கூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்களின் வழியே பாதையை ஆய்வு செய்துகொண்டிருந்த போது, அதில் இடம்பெற்றிருந்த காட்சியைப் பார்த்து அவர் அதிர்ந்து போனார். நீலநிற ஜீன்ஸ், வெள்ளை சட்டை அணிந்திருந்த இளைஞர் ஒருவர், கருப்பு, வெள்ளை நிற ஆடையில் இருந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை அவர் பார்த்திருக்கிறார். பெருவைச் சேர்ந்த அந்தக் கணவர் படத்தை பெரிதாக்கிப் பார்த்த போது, அந்த இளைஞருடன் நெருக்கமாக இருந்தது தனது மனைவி என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், மெக்ஸிகோவைச் சேர்ந்த ஆல்பர்டோ (Alberto) என்பவர், தன் வீட்டிலிருந்து தன் காதலி வீட்டுக்கு சுரங்கப்பாதை அமைத்து, அவரை ரகசியமாகச் சந்தித்து வந்திருக்கிறார். அவர், காதலியின் கணவரிடம் சிக்கிக்கொண்டார்.
Also Read: சென்னை: ஐடி-யில் வேலை; லிவிங் டுகெதர்! - திருமணத்துக்கு `நோ’ சொன்ன காதலனைச் சிறையில் தள்ளிய காதலி
மெக்ஸிகோவில் கட்டடத் தொழில் செய்துவரும் ஆல்பர்டோ, வில்லாஸ் டெல் பிராடோவுக்கு (Villas del Prado) அருகிலிருக்கும் டிஜுவானா (Tijuana) பகுதியில் உள்ள தன் காதலியின் வீட்டுக்குச் செல்லும் நீண்ட சுரங்கப் பாதையை தோண்டியுள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் ஜார்ஜ், பணிக்குச் சென்றிருக்கும் சமயத்தில், ஆல்பர்டோ சுரங்கப்பாதையை அமைத்திருக்கிறார். ஜார்ஜ் வெளியில் சென்றிருக்கும் நேரங்களில் சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணும், ஆல்பர்டோவும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததுள்ளனர். பல நாள்களாக இது தொடர்ந்து வந்திருக்கிறார். இந்தநிலையில், ஜார்ஜ் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழக்கமான நேரத்தை விட முன்னதாகவே சமீபத்தில் ஒருநாள் வீட்டுக்கு வந்துவிட்டார். அப்போது, ஆல்பர்டோ, தன் மனைவி இருவரும் தனிமையில் இருந்ததைp பார்த்த ஜார்ஜ் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
சோபாவுக்குப் பின் மறைய முயன்ற ஆல்பர்டோவை பிடித்த ஜார்ஜ், தனது வீட்டில் இருந்த சுரங்கப்பாதையையும் கண்டு அதிர்ந்திருக்கிறார். அந்த சுரங்கப் பாதை தமது வீட்டிலிருந்து ஆல்பர்டோவின் வீட்டுக்குச் செல்வதையும் ஜார்ஜ் கண்டுபிடித்தார்.
ஜார்ஜ் சுரங்கப்பாதை வழியாக ஆல்பர்டோ வீட்டை அடைந்தபோது, ஆல்பர்டோ திருமணமானவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தை தனது மனைவியிடமிருந்து ஆல்பர்டோ மறைக்க முயன்று, ஜார்ஜைத் தன் வீட்டை விட்டு வெளியேறும்படி கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக ஜார்ஜ் மற்றும் ஆல்பர்டோ இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானதால், இச்சம்பவம் வெளியே தெரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த விவகாரத்தில் ஆல்பர்டோ மீது ஜார்ஜ் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து ஆல்பர்டோ கைது செய்யப்பட்டார். ஆல்பர்டோ அமைத்த சுரங்கப்பாதையின் நீளம் உள்ளிட்ட தகவல்களை மெக்ஸிகோ ஊடகங்கள் வெளியிடவில்லை.
from Latest News https://ift.tt/3pIFW5H
0 Comments