சென்னை ஈக்காட்டுதாங்கல், சர்தார் காலனியில் உள்ள விடுதியில் தங்கியிருப்பவர் கிரிதரன் (28). இவர், ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 19.10.2020-ம் தேதி இரவு அறையில் துங்கினார். பின்னர் மறுநாள் காலை கண்விழித்து பார்த்தபோது அறையில் வைத்திருந்த 2 லேப்டாப்கள், 3,700 ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த கிரிதரன், கிண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விடுதி இருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் அறைக்குள் நுழைந்து லேப்டாப்களைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

இதையடுத்து லேப் டாப்களைத் திருடிய இளைஞர் குறித்து போலீஸார் விசாரித்தனர். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால், லேப் டாப் திருடியவரைப் பிடிக்க துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமிஷனர் சுப்புராயன், இன்ஸ்பெக்டர் கர்ணன், எஸ்.ஐ- ஸ்ரீதர், தலைமை காவலர்கள் தாமோதரன், அச்சுதராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், லேப்டாப் திருடன் குறித்த தகவல்களை சேகரித்து வந்தனர். இந்தச் சமயத்தில் தனிப்படை போலீஸாருக்கு முக்கியத் தகவல் ஒன்று கிடைத்தது. அதன்அடிப்படையில் லேப்டாப்களைத் திருடிய வழக்கில் ராஜதுரை (22) என்பவரை போலீஸார் திருச்சியில் கைது செய்தனர். இவரின் சொந்த ஊர் கள்ளகுறிச்சி, ஜவுளிபாளையம். இவர் மீது ஏற்கெனவே லேப்டாப் திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து 11 லேப்டாப்கள், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்துவருகிறது.
லேப்டாப் திருடிய வழக்கில் சிக்கிய ராஜதுரையிடம் விசாரித்தபோது முக்கிய தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், ``லேப்டாப் திருட்டு வழக்கில் கைதான ராஜதுரையும் அவரின் நண்பரான சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பெயின்டரும் அடிக்கடி செல்போனில் பேசும் ரகசியத் தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதனால் பெயின்டரின் செல்போன் சிக்னலை ரகசியமாகக் கண்காணித்தோம். அப்போது பெயின்டருடன் பேசியவரின் செல்போன் சிக்னல் திருச்சியைக் காட்டியது.

இந்தச் சமயத்தில் பெயின்டரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி ராஜதுரை திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்த தகவல் கிடைத்தது. அதனால் திருச்சியில் ராஜதுரை பதுங்கியிருக்கும் தகவலை உறுதிப்படுத்தினோம். திருச்சியில் அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. அதுதொடர்பாக விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ராஜதுரை செல்போனில் பெருங்குடி நண்பரான பெயின்டரிடம் பேசினார். அப்போது, திருச்சியில் சந்திக்கலாம் என்ற தகவலைத் தெரிவித்தார். உடனடியாக தனிப்படை போலீஸார் திருச்சிக்குச் சென்று அவர் கூறிய இடத்தில் காத்திருந்தோம். அங்கு வந்த ராஜதுரையைப் பிடித்தோம். இவர், கடந்த 2011-ம் ஆண்டு முதல் லேப்டாப்கள், செல்போன்களை திருடி வருவது விசாரணையில் தெரியவந்தது.
Also Read: சென்னை: ஐஸ்கிரீம் முதல் லேப்டாப் வரை! - அடுத்தடுத்து நடந்த திருட்டால் அதிர்ச்சி
5-ம் வகுப்பு வரை படித்துள்ள ராஜதுரையும் பெருங்குடியைச் சேர்ந்த பெயின்டரும் ஒன்றாகக் கட்டட வேலை செய்து வந்திருக்கின்றனர். அப்போதே கட்டட வேலைக்கு வருபவர்கள் இரவில் தூங்கும்போது செல்போன்களைத் திருடிவிட்டு ராஜதுரை எஸ்கேப்பாகியிருக்கிறார். அதன்பிறகு சென்னையில் அறை எடுத்து தங்கியிருக்கும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு இரவு, பகல் என மாறி மாறி வேலை இருக்கும். இரவு பணி முடிந்து பகலில் வீட்டிலிருக்கும் ஊழியர்கள், காற்றோட்டத்துக்காக கதவை திறந்து வைத்துவிட்டு அறைக்குள் தூங்குவதுண்டு. அதை நோட்டமிடும் ராஜதுரை, சத்தமில்லாமல் அறைக்குள் நுழைந்து லேப்டாப், செல்போன் என கையில் கிடைப்பதைத் திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். திருடிய லேப்டாப், செல்போன்களை திருச்சியிலிருக்கும் இன்னொரு நண்பர் மூலம் விற்று வந்திருக்கிறார்.

ஏற்கெனவே திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்ற ராஜதுரை, திருந்திவாழ முடிவு செய்திருக்கிறார். அதனால் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். கொரோனா காரணமாக காய்கறி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ராஜதுரை, வருமானமின்றி சிரமப்பட்டிருக்கிறார். அப்போதுதான் அவரின் பாட்டி இறந்திருக்கிறார். பணமில்லாமல் சிரமப்பட்ட ராஜதுரையின் குடும்பத்தில் சொத்துப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் வாழ்க்கையில் பணம் முக்கியம் எனக்கருதிய ராஜதுரை மீண்டும் திருட ஆரம்பித்திருக்கிறார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். லேப்டாப் திருட்டு வழக்கில் ராஜதுரைக்கு உதவியவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
from Latest News https://ift.tt/3rF8LS7
0 Comments