தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வருகிறது. கட்சிகள் தங்களின் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ``தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால், கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் எந்த பலனில்லை. உடனடியாக அ.தி.மு.க பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இந்த நிமிடம் வரை அ.தி.மு.க கூட்டணியில் தான் தே.மு.தி.க உள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிட தே.மு.தி.க தயாராகி வருகிறது. எனினும் கூட்டணி குறித்த இறுதி முடிவை தே.மு.தி.க பொதுக்குழு, செயற்குழு எடுக்கும்” என்றார்.
தொடர்ந்து சசிகலா விடுதலை குறித்து பேசிய பிரேமலதா, ``ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அதே நேரம் நான் சசிகலாவை ஆதரிப்பது, அ.தி.மு.க-வுக்கு எதிரான நிலை என்று யாரும் பார்க்க கூடாது. சசிகலா வருகை அ.தி.மு.க-வில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்றார்.
வரும் தேர்தலில் மூன்றாவது அணி அமைவது குறித்து பேசிய பிரேமலதா, ``மூன்றாவது அணி குறித்து இப்போது கருத்து கூறமுடியாது. வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பா.ம.க-வின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் அனைத்து ஜாதியினரும் கோரிக்கை வைத்தால் என்னவாகும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு குழுவுடன் வரும் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் முடிவை பொறுத்து அரசியல் முடிவை அறிவிப்போம் எனவும் பா.ம.க சிறப்பு நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
from Latest News https://ift.tt/3am3O8P
0 Comments