காங்கிரஸ் கட்சி தனது செயல்பாடுகளாலும், நிரந்தர தலைமையற்ற நிர்வாகத்தாலும் தொடர்ந்து பலவீனமாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், `காங்கிரஸ் கட்சியை வலிமையாக்குவதே எங்களது நோக்கம்’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். அத்தோடு, அவர் ராகுல் காந்தியின் செயல்கள் குறித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் தெரிவித்திருக்கும் கருத்துக்களானது பேசுபொருளாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் குளோபல் காந்தி அறக்கட்டளையின் சார்பில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமையன்று (27.02.2021) துவங்கிய நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல், ``காங்கிரஸ் கட்சி தனது செயல்பாடுகளால் பலவீனமாகி வருகிறது என்பதே தற்போது நிகழ்ந்து வரும் நிதர்சனம். அதற்காகவே நாங்கள் இங்கே கூடியுள்ளோம். கட்சியை வலுப்படுத்துவதே எங்களது நோக்கம்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்தின் அனுபவத்தை கட்சி பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் நிலவரம் குறித்து நன்கு அறிந்தவர் குலாம் நபி ஆசாத். அவர் நாடாளுமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தைப் பழுதுபார்க்கும் ஒரு பொறியாளரை விடவும் அனுபவம் வாய்ந்தவர்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கபில் சிபல், மத்திய பா.ஜ.க. அரசின் செயல்களையும் மிகவும் சாடி பேசினார். “ஏற்கனவே, பல்வேறு நெருக்கடிகளில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு மத்திய அரசு மேலும் மேலும் வரிகளை சுமத்தி மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது” என்று விமர்சித்தார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைமை வேண்டி கட்சியைச் சேர்ந்த 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியது கட்சித் தலைமையின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி ஆலோசித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கண்காணித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமை இதுவரை எந்தவொரு கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இக்கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்களான மனீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பூபேந்தர் சிங் ஹூடா, விவேக் தன்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
from Latest News https://ift.tt/3sG8Uoh
0 Comments