கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். மாசி கொடை விழாவை முன்னிட்டு ஹைந்தவ சேவா சங்க மாநாட்டை தொடங்கிவைத்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், "ஒவ்வொரு வருடமும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடியேற்று நிகழ்ச்சிக்கு எப்படியாவது வந்துவிடவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. கட்சி பொறுப்பில் இருந்த நான் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்திருப்பதற்கு காரணம் மண்டைக்காடு அன்னைதான்.
கட்சிப்பணியில் இருந்த சமயத்தில் சாதாரண தொண்டனாக இருந்த நான் மண்டைக்காடு அன்னையின் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வந்து சென்றபோது தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்டேன். ஒவ்வொரு முறையும் அன்னை என்னை அழைத்து ஆசீர்வதித்து மேலும் மேலும் உயர்வடையச் செய்கிறார் என்றால் அவரது பொற்பாதத்திற்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் ஏதோ ஒரு அரசியல் கட்சியில் இருந்து மக்களுக்கு பணியாற்ற உயர் பதவிக்கு வரவேண்டும் என நினைத்தது உண்டு. சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்று நினைத்தது உண்டு. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் அமர்ந்திருக்கும் ஒரு சபையில் ஆளுநராக உரையாற்றுவேன் என்று நான் நினைத்ததே கிடையாது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என நினைத்த என்னை, பல சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் அவைக்கு அழைத்துச்சென்று ஆளுநராக உரையாற்ற வைத்திருக்கிறார் என்றால் அது அன்னை பகவதிதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
நான் மக்களுக்கு சேவை செய்யும் பிரதிநிதியாக பொறுப்பேற்க வேண்டும், அதற்காக பதவி பிரமாணம் எடுக்க வேண்டும் என நினைத்தது உண்டு. ஆனால் நானே மக்கள் பிரதிநிதிகளுக்கு அமைச்சராக பதவி பிரமானம் செய்துவைப்பேன் என்று நினைத்துப்பார்க்கவில்லை. வேறு மாநிலத்தில் பதவிபிரமாணம் எடுக்கும்போது ஆங்கிலத்தில்தான் எடுக்க முடியும். ஆனால், தாய்மொழியாம் தமிழ் என் பெயரில் மட்டுமல்ல என் உயிரிலும் கலந்திருக்கிறது என்று நான் அடிக்கடி சொல்வது உண்டு. அன்னை பகவதி அந்த தமிழில் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழில் பதவி ஏற்க வைத்தார்.
ஒவ்வொரு முறை அன்னையை நாடி வரும்போது உயர்வை தந்திருக்கிறார். அது எனது உயர்வாக இல்லாமல் மக்களுக்கான உயர்வாக, மக்களுக்கு சேவை செய்யும் உயர்வாக நினைக்கிறேன்.
கொரோனா பரவாமல் தடுக்க நமது உணவு பழக்கங்கள் ஒரு காரணம். பெருமாளை தரிசிக்கச் சென்றால் அங்கு துளசி தீர்த்தம் கொடுப்பார்கள். சிவனை கும்பிடும்போது வில்வதை கொடுக்கிறார்கள். அவற்றை சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கொரோனா வராது. நான் மூகாம்பிகை கோயிலுக்கு போவேன் அங்கு சுக்கு, மல்லி, மிளகு சேர்ந்த கஷாயம் கொடுப்பார்கள். அவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்து அதிகரித்து, கொரோனா வராது என்று இன்று சொல்கிறார்கள். எனவே தெய்வங்களை வணங்குவோம் கொரோனாவை விரட்டுவோம்" என்றார்.
Also Read: புதுச்சேரி: `தடுப்புகள் இனி இருக்காது; என் பாணியே தனி!’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், "வெளிநாடுகள் வியக்கும் வண்ணம் நாம் கொரோனாவிலிருந்து மீண்டு உள்ளோம். கொரோனாவை எதிர்க்கும் மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுவது உலக அரங்கில் நமக்கு பெருமை. இந்தியாவின் தடுப்பூசியை வாங்குவதற்கு 50 வெளிநாடுகள் காத்திருக்கிறது என்பது இந்தியா மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது" என்றார்.
from Latest News https://ift.tt/3ktbDyq
0 Comments