https://gumlet.assettype.com/vikatan/2021-02/ff1cdf3b-c20a-4e89-9bb4-7eac507e210e/IMG_20210226_WA0179.jpgபாம்புக்கடியால் இறந்துபோன புகழ்பெற்ற ராவணன் காளை... சோகத்தில் மூழ்கிய கிராமம்!

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர் அனுராதா. தஞ்சாவூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அதோடு, பளுதூக்கும் போட்டியில் பல்வேறு பதக்கங்களையும் பெற்றுக்கொடுத்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். அப்படி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றதற்காக, தஞ்சாவூரைச் சேர்ந்த அவரது தோழி கொடுத்த பரிசுதான் இந்த ராவணன் காளை. விவசாயப் பின்னணி கொண்ட அனுராதாவிற்கு காளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால், வீட்டிலேயே காளைகளை வளர்த்து வருகிறார். தன்னுடைய அசுரன் காளையுடன், ராவணன் காளையும் பாசமாக வளர்த்து வந்தார்.

பாம்பு கடித்து இறந்து போன ராவணன்

அனுராதா பணிக்குச் சென்றுவிட்டால், காளைகளைப் பார்த்துக் கொள்வதும், பயிற்சி அளிப்பதும் அவரது அண்ணன் மாரிமுத்துதான். கடந்தாண்டு அவனியாபுரம், அலங்காநல்லூரில் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடிப் பிடிபடாத காளையாக வலம் வந்த ராவணன் காளை ஜல்லிக்கட்டு பார்க்காதவர்களைக் கூட பார்க்க வைத்த பெருமையைப் பெற்றது. தொடர்ந்து, பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பிடிபடாத காளையாக வலம் வந்தது. புதுக்கோட்டைக்குப் பெருமை சேர்ந்த ராவணனை ஊரே கொண்டாடியது.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்புதான், சோழகன்பட்டி ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்டது. உரிமையாளர்களுக்கே போக்கு காட்டிய ராவணன் திடீரென மாயமானது. மாரிமுத்து உட்பட ஊர்மக்களே பல்வேறு இடங்களில் தேடி அலைந்தும், ராவணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான், தச்சன் குறிச்சி காட்டுக்குள் ராவணன் காளையைப் பார்த்தாக மாரிமுத்திற்குத் தகவல் கிடைக்க, எப்படியும் ராவணனை மீட்டு வரலாம் என்று ஆவலுடன் சென்ற மாரிமுத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. பாம்புப் புற்றுக்கு அருகே ராவணன் காளை இறந்துபோய் கிடந்தது. காளையை மீட்கச் சென்ற அனைவரும் கதறி அழுதனர்.

Also Read: அரளிப்பாறை மஞ்சுவிரட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்! - 4 பேர் பலி; 94 பேர் காயம்

பாம்புப் புற்றினை சேதப்படுத்தி, பாம்புப் புற்று அருகே கிடந்ததால், பாம்பு கடித்து ராவணன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியில் ராவணனை எடுத்து வந்தவர்கள் ஊர்வலமாக நெம்மேலிப்பட்டிக்கு எடுத்துச் சென்றனர். காளையின் உடலைப் பார்த்து ஊர்மக்கள் பலரும் கதறி அழுதனர். இறந்த செய்தி கேட்டு அருகருகே உள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நேரடியாக வந்து காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இறுதிச் சடங்குகள் நடைபெற்று ராவணன் காளை புதைக்கப்பட்டது. மாவட்டத்திற்கும், கிராமத்திற்கும் பெருமை சேர்த்த ராவணன் காளையின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.



from Latest News https://ift.tt/3dQf7d1

Post a Comment

0 Comments