https://gumlet.assettype.com/vikatan/2021-02/af898d6f-9103-4df1-a8fb-201f4a84fc95/WhatsApp_Image_2021_02_26_at_16_42_25.jpegதி.மு.கவின் அழைப்பு; விஜயகாந்துடன் சந்திப்பு; நேற்று பாமக, இன்று பாஜக?! -சூடுபிடிக்கும் தேர்தல் களம்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை டெல்லியில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் என அறிவிக்கப்பட்டது முதல், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

முன்னதாக தமிழக அரசியல் கட்சிகள் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்த நிலையில் ஏப்ரல் முதல் வாரத்திலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டதால், குறுகிய காலகட்டத்தை கருத்தில் கொண்டு வேகமாக பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.

இதனால் வெள்ளிக்கிழமை மாலை அறிவிப்பு வெளியான நிமிடம் முதலே, அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளிலும் மற்ற தேர்தல் பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஆளும் அ.தி.மு.க கட்சி பா.ம.க உடனான கூட்டணியை இறுதி செய்தது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க 23 இடங்களில் போட்டியிட உள்ளதாக நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

பா.ம.க-வுக்கு 23 இடங்கள்

நேற்று அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 23 இடங்களில் இறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பா.ஜ.க-வுக்கான இடங்கள் உறுதி செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பா.ஜ.க தலைவருமான அமித் ஷா இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்றும், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 18 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Also Read: Election Updates: `கூட்டணியில் தொகுதிகளைக் குறைத்துக்கொண்டது ஏன்?’ - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தி.மு.க தங்களை அழைத்து பேசவில்லை என்று தே.மு.தி.க தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று பா.ம.க உடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, தமிழக அமைச்சர்கள் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் இல்லத்தில் கே.பி முனுசாமி, தமிழக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி குறித்து பேசப்பட்டுள்ளது. விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயகாந்தை சந்தித்த அமைச்சர்கள்

தி.மு.க-வைப் பொறுத்தவரையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க-வின் பொருளாளர் டி.ஆர் பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஏற்கனவே அக்கட்சி காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தவிர, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் அடுத்த அடுத்த நாள்களில் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் 2-ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணலை நடத்தவும் தி.மு.க முடிவெடுத்துள்ளது.

தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்

மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்தவரை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் நேர்காணல் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் நடைபெறும். மார்ச் 7-ம் தேதி கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

Also Read: கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள்; பா.ம.க கூட்டணி அறிவிப்பு! - தேர்தல் அறிவிப்பும் அதிரடிகளும்



from Latest News https://ift.tt/37WXnJg

Post a Comment

0 Comments