https://gumlet.assettype.com/vikatan/2021-03/fb01d591-f3b3-4b3e-9aee-2679b60916d9/Maduraimalli.JPG"பாட்டுக்கு வேறொருத்தர் சொந்தம் கொண்டாடியதை தாங்கமுடியல!"- பாடகி மதுரமல்லி திடீர் மரணம்!

நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர் மதுரமல்லி. இவர் சமீபத்தில் நாட்டுப்புறப் பாடகர்கள் ராஜலட்சுமி - செந்தில் கணேஷைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பானார். அந்த வீடியோவில் தற்கொலை செய்துகொள்வேன் எனப் பேசியிருந்த மதுரமல்லி, நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

"மனசு வலிக்கிறது. நான் எழுதி, இசையமைத்து பாடிய பாடலை யாரோ ஒருவர் பாடியதாக ராஜலட்சுமி மேடையில் பேசியது அசிங்கமாக உள்ளது. நான் பார்த்து இந்த இடத்துக்கு வந்துள்ளார் ராஜலட்சுமி. அவரது கருத்தை வாபஸ் பெறாவிட்டால், நான் தற்கொலை செய்துகொள்வேன்" என அந்த வீடியோவில் பேசியிருந்தார் மதுரமல்லி.

பாடகி மதுரமல்லி வெளியிட்ட வீடியோவிலிருந்து...

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ராஜலட்சுமியோ, "மதுரமல்லியின் பாடலை நாங்கள் இயற்றியதாகச் சொல்லவில்லை. யூடியூப் சேனல் ஒன்று என்னுடைய பேச்சை எடிட் செய்து வெளியிட்டதால் நடந்த தவறு அது!" என விளக்கம் தந்திருந்தார்.

இந்நிலையில்தான் நேற்று முன்தினம் மதுரமல்லி திடீரென உயிரிழந்துள்ளார். மதுரமல்லியின் கணவர் ராஜேந்திரனிடம் பேசினேன்.

"அவ பாட்டை வேறொருத்தர் சொந்தம் கொண்டாடியதை அவளால ஜீரணிக்க முடியல. ரொம்பவே மன அழுத்தத்துல இருந்தா. நான் கூட இந்த விவகாரத்தை விட்டுடலாம்னு சொன்னேன். ஆனாலும் அவளால அதைக் கடந்து வர முடியலை. இதுக்கிடையில ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில தேர்தல்ல போட்டியிட முடிவு செஞ்சிருந்தா. ஆனா, வேட்பு மனு தள்ளுபடி ஆகிடுச்சு. அந்தக் கவலையும் அவளுக்கு சேர்ந்துகிடுச்சு. எல்லாம் சேரப்போய் நெஞ்சுவலியால போய் சேர்ந்துட்டா!" என்றார் ராஜேந்திரன்.

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

"'மாமானு கூப்பிடத்தான்' பாடல் புகழ் மதுரமல்லி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" என இரங்கல் தெரிவித்திருந்த செந்தில் கணேஷிடம் பேசினேன்.

"குறிப்பிட்ட அந்தப் பாடல் சர்ச்சைக்கு நாங்க ஏற்கெனவே விளக்கம் தந்துவிட்டோம். மேற்கொண்டு நாங்கள் அதைப்பற்றி பேச விரும்பவில்லை. அவங்கதான் மறுபடியும் ராஜேஸ்வரி ப்ரியா மூலம் அதுபத்திப் பேசணும்னு கூப்பிட்டாங்க. முடிஞ்சு போன விஷயத்தை ஏன் மறுபடியும் வளர்க்கணும்னு நாங்க போகலை. இப்ப திடீர்னு அவங்க இறந்துட்டதா தகவல். நம்பவே முடியலை. அவங்க ஆன்மா சாந்தி அடையணும்னு வேண்டிக்கிடுறேன்" என்றார் செந்தில் கணேஷ்.



from Latest News https://ift.tt/3djAQbi

Post a Comment

0 Comments