https://gumlet.assettype.com/vikatan/2021-03/804dc911-f277-4fda-95be-1bbf14c4a778/image_01.jpgதற்சார்புப் பசுமைத் தாய்மைப் பொருளாதாரம் - நாம் தமிழர் முன்வைக்கும் பொருளாதாரத் திட்டம் என்ன?

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

(தமிழ் மறை: 737)

மேலிருந்து வரும் மழையும், கீழிருந்து வரும் ஊற்றுமாகிய இருவகை நீர்வளமும், சரியாக அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து பெருகி வரும் ஆறும் ஆகிய நான்கும்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளத்திற்கான அடிப்படை காரணிகள் என்கிறார் தமிழ்மறை தந்த வள்ளுவப் பாட்டன். இந்த நான்கும் சரியாக அமைந்தால் ஒரு நாடு உண்ணும் உணவு, குடிக்கும் நீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வெளிநாடுகளில் கையேந்தாமல் நமது நாட்டிலேயே தன்னிறைவு பெற முடியும். அத்தகைய இயற்கை வளங்கள் கெடாதவாறு தற்சார்புப் பசுமை பொருளாதாரத்தையே நாம் தமிழர் அரசு முதன்மையானதாக முன்னெடுக்கிறது.

ஆனால், தற்போது நம் நாடு முன்னெடுக்கும் பொருளாதாரக் கொள்கை என்பது இயற்கை வளங்களான நிலத்தையும், நீரையும், காற்றையும் சீரழிக்கின்ற தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கான தரகுப் பொருளாதாரமாகும். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற கொள்கையின் அடிப்படையில் வெளிநாட்டு முதலாளிகளை இங்கே முதலீடு செய்யவைத்து தனியார் இலாபத்தை முன்னிறுத்தி நடக்கும் இப்படிப்பட்ட முறையில் இலாபம் ஒன்றே குறிக்கோளாகப் பார்க்கப்படும்.

நாம் தமிழர் முன்வைப்பது தற்சார்பு பசுமைத் தாய்மை பொருளாதாரம் எனும் மாற்றுப் பொருளாதாரக் கொள்கையாகும். அனைத்து சிற்றூர்களிலும் அவரவர்கள் வாழுமிடத்தில் அந்தந்தப் பகுதிகளில் உற்பத்தியாகின்ற பொருள்களை மதிப்புக் கூட்டச்செய்து அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்து பொருளாதாரத்தையும் பெருக்கிக்கொள்ள உதவும் முறையாகும். அண்ணல் காந்தியடிகள் ``உண்மையான இந்தியா நகரங்களில் இல்லை; அது சிற்றூர்களில் உள்ளது” என்றார். கிராமங்களைச் செழுமைப்படுத்த சிறு தொழில்களை விவசாயத்துடன் ஒருங்கிணைப்பது, விவசாயிகளின் நேரத்தையும் ஆற்றலையும் பயன்படுத்திச் சிற்றூர்களில் வாழும் மக்களுக்கு வேலையின்மையைப் போக்கி வருமானத்தைப் பெருக்கவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவும். `பெருந்தலைவர் காமராசர் உணவுக்கு வெளிநாட்டில் கையேந்தவா நாம் விடுதலைப் பெற்றோம்? நம்மிடம் உள்ளதைப் பெருக்கி உண்டு வாழ்வதே பாதுகாப்பானது’ எனக் கூறுகிறார். அதைத்தான் தற்சார்பு பொருளாதாரக் கொள்கை என்கிறது நாம் தமிழர் கட்சி.

பொதுவாக நம் நாடு நகர்ப்புற வளர்ச்சியை மட்டுமே கணக்கில் கொண்டு தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, வேளாண்சார் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இப்போக்கு நீடித்தால் உணவுக்கு வெளிநாட்டை நம்பியிருக்கும் நிலை ஏற்படும், இது மிகமிக ஆபத்தானது. நாம் தமிழரின் ஆட்சியில் இயற்கையைச் சீர் கெடுக்காத, அதனைச் செழுமைப்படுத்துகிற நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நகர்ப்புற மற்றும் சிற்றூர்களின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கத் திட்டங்கள் வகுக்கப்படும். தொழில்வளர்ச்சி ஒருபோதும் மக்களுக்கும் மண்ணுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடாது என்பதில் நாம் தமிழர் அரசு கவனமாக இருக்கும்.

நகரங்களில் உள்ள கல்வி, மருத்துவம் வேலைவாய்ப்புக் கிராமங்களுக்குக் கிடைக்கவும், கிராமங்களில் கிடைக்கும் இயற்கை சார்ந்த சூழல், தூய காற்று, மக்கள் இடைவெளி நகரங்களுக்குக் கிடைக்கவும் சிற்றூர்களின் பொருளாதாரப் பெருக்கம் அவசியமாகிறது. சிற்றூர்களின் வேலைவாய்ப்பில் முதன்மையாக வேளாண்மை, கால்நடைகள் வளர்த்தல், கோழிப்பண்ணை அமைத்தல், மீன் பண்ணைகள் வைத்தல், பட்டுப்பூச்சிகள் வளர்த்தல், தேனீக்கள் வளர்த்தல் போன்றவையும், கைத்தொழில் மூலமாகச் செய்யப்படும் மட்பாண்டங்கள் செய்தல், பாய் முடைதல், கட்டில் பின்னுதல், நெசவு செய்தல், தச்சுத் தொழில், போன்ற அனைத்தையும் நிறுவன மயமாக்கி அரசுப் பணியாக மாற்றப்படும்.

மறுபுறம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தொழில் வளர்ச்சி மிகவும் அவசியம், அதற்கான தொழிற்கொள்கைகளும் வலுவான கட்டமைப்புகளும் வலிமையானதாக இருக்க வேண்டும். உலக நாடுகளின் தொழில் வளர்ச்சியோடு போட்டியிட புதிய புதிய தொழில்நுட்பமும் திறன் வாய்ந்த தொழிலாளர்களையும் உருவாக்கவேண்டியது அவசியமாகிறது. அதற்கான அதிநுட்ப தொழிற்பயிற்சி நடுவங்களை அமைத்து திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதேபோல் தொழில் முனைவோருக்குத் தேவையான வழிகாட்டுதலும் பயிற்சியும் அளிக்கப்படும்.

அயல்நாட்டு முதலீட்டைக் காட்டிலும் மண்சார்ந்த தொழில் முனைவோரை உருவாக்குவதில் முனைப்புக் காட்டப்படும். புதிய தொழில் தொடங்க தற்போது உள்ள சிக்கல்களை (கையூட்டு,ஊழல்) களைந்து நடைமுறை எளிதாக்கப்படும். தனி ஒரு நபரால் தொடங்க இயலாத தொழில்களைப் பல முதலாளிகளைக் கொண்டு, தேவைப்பட்டால் அரசும் தன் பங்கிற்கு முதலீடு செய்து தமிழ்த்தேசிய கூட்டு முதலாளிகளை உருவாக்கும். இதன்மூலம் நம் நாட்டின் வளங்கள் அயல்நாடுகளுக்குக் கொள்ளை போகாமல் நம் மக்களுக்கே பயன்பட வழி ஏற்படும்.

வெளிநாடுகள் தடைசெய்து கொண்டிருக்கும் மக்களை அச்சுறுத்தும் அனல்மின், அணுமின் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டு, காற்று, சூரியஒளி, கடல் அலை போன்று புதுப்பிக்கத்தக்க மாற்றுசக்தி மின் உற்பத்தியில் முதலீடு செய்து குறைந்த விலையில் தடையில்லா மின்சாரம் வழங்க நாம் தமிழர் அரசு முயற்சி எடுக்கும். கட்டுமானத் துறைக்கு அதிக அளவில் தேவைப்படும் பைஞ்சுதை(சிமெண்ட்), கம்பி, செங்கல் போன்றவற்றை அந்தத் துறைசார்ந்த உள்ளூர் நிறுவன முதலாளிகளை ஒருங்கிணைத்து தேவைப்பட்டால் அரசும் இணைந்து பெரிய அளவில் உற்பத்தி செய்ய உதவிபுரியும். வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் இயந்திர ஊர்திகளின் உதிரிப்பாகங்களை உள்நாட்டு இறக்குமதியாளர்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும்.

கரும்பு விவசாயிகளை ஒருங்கிணைத்துப் பண்ணை உற்பத்தி முறையில் விவசாயம் செய்து தொழிற்சாலை அமைத்து மதிப்புக்கூட்டி சர்க்கரை முதல் எத்தனால் வரை பல பொருட்களை உற்பத்தி செய்து லாபம் பெறவும், இதேபோல் பருவகால விளை பொருள்களான பனை, மா, முந்திரி, பலா போன்றவற்றையும் ஒன்றிணைந்த விவசாயத் தொழிற்கூடம் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி அவர்களின் பொருளாதாரப் பெருக்கத்திற்கு நாம் தமிழர் அரசு உதவிசெய்யும். வெளிநாட்டுக் குளிர்பானங்களும், மதுபானங்களும் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டு இளநீர், நுங்கு, பதநீர், கள் உள்ளிட்ட மக்களின் உடலையும், பொருளாதாரத்தையும் பாதிக்காத இயற்கையான பானங்களை நாம் தமிழர் அரசு ஊக்குவிக்கும். இதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும். விளைந்த விவசாய உற்பத்தி பொருட்கள் கெடாவண்ணம் பெரிய அளவில் பதன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

அதேபோல் மீனவர்கள் பாதுகாப்பாகத் தொழில் செய்யவும், அதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பெருக அனைத்து உதவிகளையும் செய்யும். நெசவுச் சோலை அமைத்து பருத்தி உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருள்களிலிருந்து பின்னலாடை உற்பத்திக்கும், நெகிழி மற்றும் குழைமத்திற்கு மாற்றாகப் பனை, சணல், மூங்கில் பொருள்களிலிருந்து பைகள், கூடைகள் செய்யவும் அவற்றைப் பன்னாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவும் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் நம் தமிழர் அரசு அளிக்கும். மேலும் இயற்கை மாசுபடா வண்ணம் தோல் மற்றும் வேதிப்பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்த நாம் தமிழர் அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு நாட்டின் நிலத்தைக் கெடுக்காத, நீரை நாசப்படுத்தாத, காற்றை மாசுபடுத்தாத மக்களின் உடல்நலனைப் பாதிக்காத, அதேநேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நிலமும் வளமும் சார்ந்த தொழில் வளர்ச்சியை நாம் தமிழர் அரசு செயல்படுத்தும். தற்சார்பு பசுமைப் பொருளாதாரக் கொள்கை மூலம் நிலைத்த, நீடித்த, நிரந்தரப் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். அதைவிட நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற மழை, மலை, காடு, ஆறு ஆகிய செல்வங்களைப் பாதுகாத்து நமது அடுத்தத் தலைமுறைக்கு நாம் கையளிக்கவும் முடியும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் நாம் தமிழரின் பொருளாதாரக் கொள்கை என்பது, பூமியில் நாம் வசதியாக வாழ்வதற்கான தேடலை நோக்கியதல்ல. நாம் வாழ்வதற்கு வசதியானதாகப் பூமியை என்றென்றைக்கும் பாதுகாக்க வேண்டிய தீர்வினை நோக்கியது. மண்ணை வாழ்விக்காது மண்ணில் வாழும் ஓர் உயிரினமான மனிதனை வாழ்விக்க இயலாது.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண்

(தமிழ் மறை: 742)

பன்னாட்டு, தனியார் பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக மாறியிருக்கும் தமிழ்நாட்டை வளக் கொள்ளையில் இருந்து மீட்க, அடுத்த தலைமுறைக்கு வாழத் தகுதியுள்ள ஒரு நிலமாக மாற்றி அமைக்க, இது போன்ற திட்டங்கள் இந்தியாவுக்கே ஒரு முன் மாதிரியாக இருக்கிறது. இந்த மாற்றுப் பொருளாதாரம் மக்களை ஈர்க்குமா? மக்கள் நாம் தமிழர்க்குச் சாதகமாக ஏப்ரல் 6-அன்று சாதகமாக வாக்களிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நாம் தமிழர் கட்சியின் திட்டங்கள் பற்றி இன்னும் விரிவாக அறிந்து கொள்ள:

ஆட்சி வரைவு - https://www.makkalarasu.in/

நிதி பங்களிப்புச் செய்ய - https://donate.naamtamilar.org/



from Latest News https://ift.tt/39tO9Vz

Post a Comment

0 Comments