நிதியாண்டின் (Financial year) இறுதி நாளான இன்று தொழில் முனைவோரும், தனியார் நிறுவனங்களும், பொது நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கணக்கு வழக்குகளை முடித்துவருகின்றன. நிறுவனங்கள் தங்களது அக்கவுன்ட்டிங், ஆடிட்டிங் மற்றும் இன்கம்-டேக்ஸ் தாக்கல் ஆகியவற்றை முறைப்படுத்த முனைந்து கொண்டிருக்க, அரசு மற்றும் தனியார் வங்கிகளோ அதைவிட பிசியாக, தங்களது கணக்குகளை படுவேகமாக முடித்து, புதிய நிதியாண்டை ஏப்ரல் 1அன்று துவங்க ஆயத்தமாகின்றன.

நம் அனைவருக்கும் புத்தாண்டு என்பது ஜனவரி 1 என்றிருக்க, நிதியாண்டு என்ற புதுக்கணக்கு மட்டும் ஏன் ஏப்ரல்1 முதல் மார்ச் 31 வரை என்ற கேள்விக்கு, ஆங்கிலேயர்களை கைகாட்டுகிறது வரலாறு. ஆங்கிலேயர்கள் கிரிகோரியன் காலண்டரைப் பின்பற்றி வந்ததால், காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் அதைப் பின்பற்றி வந்தது தெரிய வருகிறது. 1867-ம் ஆண்டு முதலாக நமது நாட்டிலும் இதன் காரணமாக ஏப்ரல்-மார்ச் நடைமுறையில் இருந்து வருகிறது.
Also Read: ஐன்ஸ்டீன் ஏன் சோப் பபுல்ஸுடன் விளையாடினார்?! - புத்தம் புது காலை - 1 #6AMClub
அதேசமயம் பெரும்பான்மையான அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் ஃபிரான்ஸ், அயர்லாந்து, இந்தோனேசியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஜனவரி 1, புதுவருடத்தன்று தான், நிதியாண்டு துவங்குகிறது. நமது நாட்டிலும், நெஸ்லே இந்தியா, போஷ் ஆகிய தனியார் நிறுவனங்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை என ஏற்கனவே நடைமுறைப்படுத்தியிருக்க, 2018-ம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும்கூட இம்முறை மாற்றியமைக்கப்படும் என அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
நிதியாண்டு எதுவென்றாலும், அதிலுள்ள வரவுசெலவு கணக்கு வழக்குகள், வருமானவரி மற்றும் நிதி அறிக்கைகள்தான், மத்திய மாநில பட்ஜெட் மற்றும் புதிய நிதித்திட்டங்கள் என்ற புதுக்கணக்கை அரசாங்கம் தீட்ட உதவுகின்றன. இவையனைத்தும் வருமானம் கூடுதலாக உள்ள தனியார் துறைகளுக்கும், தொழில் ஸ்தாபனங்களுக்கும், அரசாங்கத்திற்கும் நன்கு பொருந்தும்.

ஆனால், தனது ஆசைகளையும், தேவைகளையும், வருமானத்தைக் காட்டிலும் அதிகமாக தேக்கி வைத்திருக்கும் சாதாரண மனிதனுக்கு, இந்தக் காசு, பணம், துட்டு, மணிமணி உள்ளடக்கிய நிதியாண்டு எதைத் தான் எடுத்துரைக்கிறது?!
ஜனவரி 1 புத்தாண்டில் எப்போதும் போல நிறைவேறாத ஆசைகள் அனைத்திற்கும் தீர்மானங்களை (new year resolutions) மேற்கொள்ளலாம். ஆனால், ஏப்ரல் 1 நிதியாண்டு முதல், நமது எல்லைகளைத் தாண்டாமல், நமது தேவைக்கேற்ப, மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்கிற தீர்மானத்தை எடுக்கவேண்டும்.
ஏனெனில்,
"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை"
அதாவது, பொருள் வரும்வழி சிறியதாக இருந்தாலும், அது போகும்வழி பெரியதாக இல்லாவிட்டால் துன்பம் இல்லை என்ற வள்ளுவன் வரிகளுடன் வரும் நிதியாண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் வாருங்கள்!
from Latest News https://ift.tt/3u883xk
0 Comments