திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடுகிறார் தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி. ’ஆத்தூர் ஐ.பெரியசாமியின் கோட்டை.!’ என்று சொல்லும் அளவிற்கு, தொகுதி மக்களிடையே செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். இவரை எதிர்த்து பா.ம.க பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார். தொகுதி முழுக்கவே வலம் வரும் திலகபாமா, ‘பட்டிவீரன்பட்டி தான் நான் பொறந்த ஊரு. நான் வெளி ஊர் ஆள் இல்லை.!’ என மக்களிடையே பேசுவதும், சகஜமாக பழகுவதும், காய்கறி விற்பது, தப்பு அடித்து மக்களை உற்சாகப்படுத்துவதும் என தனது ஸ்டைலில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
குடகனாறு அணைப் பிரச்னை காரணமாக, கடந்த சில மாதங்களாகவே, 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஐ.பொரியசாமிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தினர். `ஐ.பெரியசாமி தான் தங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தடுத்து வைத்துள்ளார்!’ என்பது அந்த கிராம மக்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்த ஐ.பெரியசாமி, `தனக்கும் குடகனாறு பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றார். தற்போது, குடகனாறு பிரச்னையைக் கையில் எடுத்துள்ள திலகபாமா, ஐ.பெரியசாமிக்கு எதிராக பிரசாரம் செய்வது மட்டுமல்லாமல், ’குடகனாறு பிரச்னை குறித்து விவாதிக்கத் தயாரா?’ என சவால் விடுக்கிறார். இதனால் தி.மு.க-வினர் கொதிப்படைந்துள்ளனர்.
Also Read: `ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்!' - பா.ஜ.க-வைச் சாடும் ஐ.பெரியசாமி
சமீபத்தில் தொகுதிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட திலகபாமா, ஐ.பெரியசாமியை விமர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க-வினர், அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரசாரம் செய்ய விடாமல் தடுத்துள்ளனர். தி.மு.க-வினரைக் கண்டித்து பா.ம.க-வினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். காவல்துறை தலையிட்டு இருதரப்பையும் சமாதனம் செய்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றுள்ள கிராமங்களில், இதுபோன்ற நிகழ்வுகளை திலகபாமா சந்திக்கிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும், தன்னுடன் பிரசாரத்திற்கு வரும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், `ஐ.பெரியசாமி பத்தி பேசுனா, பிரசார வாண்டியில வர மாட்டேன்’ என கூறுகிறார்களாம். இது திலகபாமாவை அதிரச் செய்திருக்கிறது என்கின்றனர். சில இடங்களில், பிரசாரத்தை புறக்கணிப்பது போல, பிரசார வாகனத்தில் இருந்து அ.தி.மு.க நிர்வாகிகள் கீழிறங்கிச் சென்றனர்.
இது தொடர்பாக பா.ம.க வேட்பாளர் திலகபாமாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். ``நான் ஒரு இலக்கியவாதி. ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து தான் பேசுவேன். ஐ.பெரியசாமியை தனிமனித விமர்சனம் செய்யவில்லை. ஐ.பெரியசாமி, 5 முறை ஆத்தூர் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அவரால் தொகுதி எந்த வளர்ச்சியும் அடையவில்லை.
அதுமட்டுமல்லாமல், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு நடக்கும் என்று மக்களிடம் கூறுகிறேன். அதற்கு உதாரணமாக, சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமியர் ஒருவரின் இடத்தினை ஆக்கிரமித்தது தொடர்பாக, ஐ.பெரியசாமி மீதும், அவரது மகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது அப்போது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வந்தது மக்கள் அறிந்த விசயம். இதனை மக்களிடம் சொல்லக்கூடாதா. இதுவரை யாரும் பேசாத ஐ.பெரியசாமி பற்றிய உண்மைகளைதான் நான் பேசினேன். இதற்கு தான் தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்றார்.
ஐ.பெரியசாமி பற்றி பேசினால், பிரசாரத்திற்கு வரமாட்டோம் என அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் கூறுவதாக தகவல் வருகிறதே என அவரிடம் கேட்டோம். ``அப்படியெல்லாம் இல்லை. தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியச் செயலாளர்களும், கிளைக்கழகச் செயலாளர்களும் என்னுடன் பிரசாரத்திற்கு வருகின்றனர். இது, தி.மு.க-வினர் பரப்பும் பொய்யான தகவல்.” என்றார்.
அவருக்கு மீண்டும் வாக்களிப்பதை விட, எனக்கு வாக்களியுங்கள் என்று தான் நான் மக்களிடம் கேட்கிறேன். இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள். குடகனாறு பிரச்னை, மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க நிர்வாகி ஒருவரே, குடகனாறு பிரச்னையில் ஐ.பெரியசாமிக்கு எதிராக இருக்கிறார்.
from Latest News https://ift.tt/3cHnkPT
0 Comments