கேரள மாநிலம் காயங்குளம் தொகுதியில் திறந்த வாகனத்தில் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். காயங்குளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அரிதாவும், பிரியங்கா காந்தியுடன் வாகன பிரசாரத்தில் கலந்துகொண்டார். பிரியங்கா காந்தி பிரசாரம் தொடங்கும் முன் அரிதாவின் குடும்பம், பெற்றோர் குறித்து கேட்டு தெரிந்துகொண்டார். காயங்குளம் கமலாலயம் ஜங்சன் பகுதிக்கு வாகனம் சென்றபோது, இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தனது வீடு இருப்பதாக அரிதா கூறினார். உடனே வாகனத்தை அரிதாவின் வீட்டுக்கு விடும்படி கூறினார் பிரியங்கா.
புதுப்பள்ளி பகுதியில் உள்ள அரிதாவின் வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. அவரது தாயும், தந்தையும் பிரியங்கா காந்தியை பார்க்க கிருஷ்ணாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தனர். உடனே அரிதா பெற்றோருக்கு போனில் தகவல் கூறினார். உடனடியாக காரில் புறப்பட்டு வந்தனர் அரிதாவின் பெற்றோர். அவர்கள் வந்து சேரும் வரை பத்து நிமிடம் காத்திருந்தார் பிரியங்கா.
அரிதாவின் பெற்றோர் வந்ததும் கதவை திறந்தனர். பிரியங்கா காந்தி சிறிது நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அரிதா-வின் குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் பிரியங்கா. அரிதாவின் தந்தை துளசிதரன் சிறு வயது முதல் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். பிரியங்கா காந்தி வீட்டுக்கு திடீரென விசிட் அடித்ததால் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார் துளசிதாஸ். காங்கிரஸ் தொண்டர்களும் குதூகலமாகிவிட்டனர்.
பின்னர் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்கு நேற்று மாலை நடை சாத்தும் வேளையில் பிரியங்கா காந்தி சென்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் விளக்கின் அருகில் நின்றுகொண்டிருந்த வட்டியூர்காவு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வீணா எஸ்.நாயரின் ஆடையில் திடீரென தீ பிடித்தது. பிரியங்கா காந்தியின் பாதுகாவலர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதை பார்த்து ஒருகணம் திகைத்த பிரியங்கா காந்தி, உடனே வீணாவை அணைத்து ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து வீணா எஸ்.நாயர் கூறுகையில்,``ஆற்றுக்கால் கோயிலில் பிரியங்கா காந்தி எலுமிச்சை விளக்கு ஏற்றும்போது ஏற்பட்ட நெரிசலில் எனது ஆடையில் தீ பிடித்தது. பாதுகாவலர்கள் தீயை அணைத்தாலும் நான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அப்போது பிரியங்கா காந்தி என்னை சேர்த்து பிடித்து ஒரு சகோதரியைப் போல தைரியம் கொடுத்தார். பின்னர் காரின் அருகில் சென்றபோது நான் அவரிடம் சில விஷயங்கள் சொல்லவேண்டும் என கூறினேன். உடனே அவரது காரில் என்னையும் அழைத்துச் சென்றார்.
காரில் செல்லும்போது சண்புரூப் கிளாஸ் வழியாக எழுந்து நின்று ரோட்ஷோவில் மக்களை பார்க்கும்படி என்னை அழைத்தார். தீ பிடித்ததில் எனது ட்ரெஸ் மோசமாக இருப்பது குறித்து சொன்னேன். உடனே அவரது சுடிதாரில் உள்ள துப்பட்டாவை எனக்கு தந்து போர்த்திக்கொள்ளும்படி கூறினார். ஒரு மூத்த சகோதரியாக இருந்து, ஒரு குழந்தையைப் போல என்னை பாவித்தார்" என நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
from Latest News https://ift.tt/31z0e7p
0 Comments