வேலூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பிரசார களத்தில் ஆட்டோ ஓட்டியும், குதிரை சவாரி செய்தும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் பிரசார களத்துக்கு வராமல் தவித்து வருவதால் அப்பு அதிருப்தியில் இருக்கிறாராம்.
இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலர், ``மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ஜனனி சதீஷ்குமார், சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கிறார். அவர் வேட்பாளர் அப்புவுக்கு எதிராக உள்ளடி வேலை செய்து வருகிறார். இதுநாள் வரை வேட்பாளர் அப்புவுக்கு ஆதரவாக எந்தவொரு இடத்துக்கும் சென்று ஜனனி சதீஷ்குமார் வாக்கு சேகரிக்கவில்லை. அவரிடமுள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவையும் செயல்படாமல் முடக்கி வைத்திருக்கிறார்.
பிரசாரத்துக்கு வராதது ஏன், என ஜனனி சதீஷிடம் கேட்டால், `மீட்டிங் இருக்கிறது’ என்று கதை அளக்கிறார். யாருடன் மீட்டிங் என்பதை சொல்ல மறுக்கிறார். இதேபோல், சத்துவாச்சாரி பகுதியிலுள்ள மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட மேலும் சிலரும் அப்புவுக்காக வேலை செய்யாமல் எதிர்க்கட்சியினருடன் கைகோத்துள்ளனர். கட்சிக்குத் துரோகம் செய்யும் இதுபோன்ற நபர்களுக்கு மன்னிப்பே கிடையாது.
இதுதொடர்பாக தலைமைக்குப் புகார் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது என்று தலைமை கருதுகிறது’’ என்கிறார்கள்.
இந்த நிலையில், உள்ளடி வேலைப் பார்க்கும் நிர்வாகிகளை ஓரம் கட்டிவிட்டு அந்தப் பகுதிகளில் தனது ஆதரவாளர்களை களமிறக்கி தீவிர பிரசாரம் செய்துவருகிறார் வேட்பாளர் அப்பு. வாக்குப்பதிவு நாள் நெருங்கிவிட்ட நிலையில் அப்புவின் வியூகம் எந்த அளவுக்கு கைகொடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
from Latest News https://ift.tt/3dpPhe3
0 Comments