பரமக்குடியில் கோவிட் கேர் சென்டரில் பணியாற்றிய டாக்டர்கள் இருவரை டிஎஸ்பி இழிவாகப் பேசி தாக்கியதாக எழுந்துள்ள புகார் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை எதிர்த்து அரசு மருத்துவர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் சங்கம் போராட்டங்களை அறிவித்துள்ளன.

சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தற்போது மருத்துவ சிகிச்சையில் இருப்பதால், நடந்த சம்பவம் பற்றி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் கூறும்போது, ``கடந்த 27-ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிய டாக்டர்கள் பார்த்திபனூர் விக்னேஷ், சாயல்குடி மணிகண்டன் ஆகியோர், துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டர் பணிக்கு சென்றனர்.
அவர்கள் அந்த வளாகத்திலயே தங்க வேண்டும் என்பதால் டூத் பேஸ்ட் போன்ற சில பொருள்கள் வாங்க இரவு 8.30 மணிக்கு அருகிலுள்ள கடைக்கு யமஹா பைக்கில் சென்றுள்ளனர். அப்போது கடையில் நின்றவர்களை அங்கு வந்த பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன், இழிவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். குடிச்சிருக்கியா என்றும் கேட்டிருக்கிறார்.

`நாங்கள் டாக்டர், கொரோனா பணியில் இருக்கிறோம்’ என்று இருவரும் சொல்லியும் டிஎஸ்பி கேட்பதாக இல்லை. 'டாக்டருக்கு எதுக்கு அதிக சிசி உள்ள யமஹா பைக்? நீ டாக்டரா இருந்தா பெரிய இவனா? எப்.ஐ.ஆர் போட்டு உள்ளே வச்சுடுவேன்' என்று தொடர்ந்து அவர்களை அசிங்கப்படுத்தும் வகையில் திட்டியிருக்கிறார்.
டாக்டருக்கு படிச்சாலும் மக்கள் உன்னை பார்த்து பயப்பட மாட்டார்கள். போலிஸுக்குத்தான் பயப்படுவார்கள்' என்று சம்பந்தமில்லாமல் சொன்னது மட்டுமில்லாமல், போலிஸ் வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளார்.
போலிஸ் ஸ்டேஷனுக்கு வெளியே நிற்க வைத்து டிஎஸ்பியும் மற்ற போலிஸ்காரர்களும் சேர்ந்து நீண்ட நேரம் அவர்களை பல வகையிலும் டார்ச்சர் செய்துள்ளனர்.

இருவரும் இளம் மருத்துவர்கள், காவல்துறையினரின் அச்சுறுத்தலால் மிகவும் பயந்து போயுள்ளனர்.
அவர்களை போலிஸ் பிடித்து வைத்துள்ள தகவல் உடனே தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கவனத்துக்கு வந்ததால், உடனே ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை சொல்ல, பிறகு இரண்டு டாக்டர்களையும் விடுவித்தனர்.
டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலிஸ் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. தாங்கள் அராஜகமாக நடந்து கொண்டதை மறைக்க பாதிக்கப்பட்ட டாகடர்கள் மீது பொய்யான தகவலை பரப்ப பார்த்தனர். ஆனால், அது எடுபடவில்லை.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்களிடம் அராஜகமாக நடந்துகொள்ளும் காவல்துறையினர், இப்போது டாக்டர்கள் என்று தெரிந்தே அத்துமீறி நடந்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கிறது. டி.எஸ்.பி வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கலெக்டர் எஸ்.பியிடம் வலியுறுத்துகிறோம்" என்றனர்.
பரமக்குடி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதிலும் உள்ள கோவிட் கேர் சென்டர்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தங்குமிடம், உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையிலும், பெரும் சிரமத்துடன் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் மீது வன்மத்தோடு நடந்துகொள்ளும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் வரை பரமக்குடி வட்டாரத்தில் கோவிட் கேர் பணிகளை மருத்துவர்கள் புறக்கணிக்கும்படி இச்சங்கம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் கே.செந்தில் விடுத்துள்ள அறிக்கையில், ``பரமக்குடியில் கோவிட் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை மரியாதை இல்லாமல் பேசி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அராஜகம் செய்த காவல்துறை துணை கண்காணிப்பாளரின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
உயிரை பணையம் வைத்து கோவிட் பணியில் ஈடுபடும் டாக்டர்களை கொடுமைப்படுத்திய அந்த அதிகாரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலம் தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
முதற்கட்டமாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், பரமக்குடி அரசு மருத்துவமனையிலும் அடையாள வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்துகிறோம். அடுத்த கட்ட போராட்டம் குறித்த விரைவில் அறிவிப்போம்' என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மதுரையிலும் ஹோமியோபதி டாக்டர் காவல்துறை எஸ்.ஐ.யால் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. ஊரடங்கு காலங்களில் காவல்துறையினர் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது.
கடந்த ஆண்டு ஊரடங்கில் நடந்த சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பின்பும் உயர் அதிகாரிகள் பலமுறை வலியுறுத்தியும் பல மாவட்டங்களில் காவல்துறையினர் அராஜகமாக செயல்படுவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.

டாக்டர்களின் குற்றச்சாட்டு பற்றி பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகனிடம் கேட்டோம், "நைட் 9 மணிக்கு பரோட்டோ கடை முன்னால் பைக்கில் நின்று கொண்டிருந்தார்கள். அதனால் சந்தேகத்தில் விசாரித்தேன். இதுதான் நடந்தது. மற்றபடி அவர்கள் சொல்வதுபோல் எதுவும் நடக்கவில்லை. அது கிரியேட் பண்ணி சொல்றாங்க. டார்ச்சர் பண்ணதா சொல்றதெல்லாம் பொய்...'' என்றார்.
தற்போது ராமநாதபுரம் கலெக்டரும், தமிழக சுகாதரத்துறை செயலாளரும் இச்சம்பவம் பற்றி விசாரித்து வருகிறார்கள்.
from Latest News https://ift.tt/3e01qaR
0 Comments