https://gumlet.assettype.com/vikatan/2021-04/2b48fb8f-d45c-403d-b8c1-f78d841eced3/IMG_20210430_124621.jpgவிழுப்புரத்தில் வட்டாட்சியர் வாகனம் மோதி பறிபோன மாணவியின் உயிர்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் !

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது 15 வயது மகள் மணிமேகலை. பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய கிராமத்தில் உள்ள சிறு பூந்தோட்டத்தில் கடந்த 25 ம் தேதி பூக்களை எடுத்து வருவதற்காக சென்றுள்ளார் மணிமேகலை. செஞ்சி வட்டாட்சியராக இருக்கும் ராஜன் அன்றைய தினம் விழுப்புரம் - செஞ்சி சாலையில் அரசு ஜீப் ஒன்றை இயக்கி சென்றுள்ளார். பாலப்பட்டு எனும் பகுதியில் சென்ற போது, எதிர் திசையில் சாலையில் இடபுறமாக நடந்து வந்துகொண்டிருந்த மணிமேகலை மீது வட்டாட்சியர் இயக்கி வந்த ஜீப் மோதியுள்ளது. வட்டாட்சியரிடம், வாகனம் இயக்குவதற்கான உரிய லைசென்சும் இல்லை எனக் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். நேரத்தை தாமதிக்க கூடாது என்பதினால், விபத்து ஏற்பட்ட ஜீப்பிலேயே அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் உதவியோடு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மணிமேகலை அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மாணவி மணிமேகலை.

அதன் பின்னர் தனது அலுவலகத்திற்கு சென்ற வட்டாட்சியர் ராஜன், செஞ்சி காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து "வாகனத்தை இயக்கியது ஒரு டிரைவர் என வழக்கு பதிந்திடுங்கள்" எனக் கூறி அனுப்பிவைத்தராம். இந்த தகவல் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்தவர்களுக்கு தெரியவரவே, ஆத்திரத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 தினங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த அப்பெண் நேற்று முன்தினம் ( 28.04.2021) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்குப் பின் நேற்று மதியம் 12 மணி அளவில் உறவினர்களிடம் மணிமேகலையின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வட்டாட்சியர் ராஜன், நேரில் வந்து ஆறுதலும் சொல்லவில்லை, மருத்துவ செலவை ஏற்பதாகவும் கூறவில்லை, அவர் மீது உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு தரப்பில் உரிய இழப்பீடும் அறிவிக்கவில்லை போன்ற காரணங்களை முன்வைத்து, அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாலப்பட்டு பகுதியில் சாலை ஓரமாக அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி டி.எஸ்.பி.இளங்கோவன் , அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை . "மாவட்ட ஆட்சியர் நேரில் வரவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" எனக் கூறி தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெகுநேரமாக எந்த பயனும் இல்லாததால். சுமார் இரவு 8 மணி அளவில் மாணவியின் சடலத்தை சாலையின் நடுவே வைத்து, "அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்லமாட்டோம்" எனக் கூறி மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் திண்டிவனம் சார் ஆட்சியரும் நேரில் வருவதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்ற அப்பெண்ணின் உறவினர்கள், "அதிகாரிகள் நேரில் வராமல் சடலத்தை புதைக்க மாட்டோம்" எனக் கூறி தற்போது வரை வீட்டிலேயே உடலை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

அந்த இடம் அனந்தபுரம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இந்த விசாரணையை கஞ்சனூர் காவல் ஆய்வாளர் விசாரிப்பதால், அந்த காவல்நிலைய ஆய்வாளர் (circle inspector) எழிலரசியை தொடர்பு கொண்டு பேசினோம்.

"சம்பவத்தன்று வட்டாட்சியர் ராஜன், விழுப்புரத்தில் இருந்து செஞ்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர் திசையில் சாலை ஓரமாக வந்த மணிமேகலை மீது வட்டாட்சியர் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண் கடந்த புதன் அன்று இறந்துள்ளார். தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மாணவி உடலை வாங்க மறுத்தனர். நேற்று மதியம் உடலை பெற்றுக் கொண்டனர். வட்டாட்சியர் ராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம். இன்று மாவட்ட எஸ்.பி நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவி வீட்டு தரப்பினரிடம் பேசியுள்ளார். அவரின் ஆலோசனைப்படி, காவல்துறை சார்பாக மாணவி வீட்டிற்கு 10,000 நிதி கொடுத்துள்ளோம். இன்று மாலை இறுதி ஊர்வளம் நடக்க வாய்ப்புள்ளது " என்றார்.



from Latest News https://ift.tt/3nDg0sm

Post a Comment

0 Comments