https://gumlet.assettype.com/vikatan/2021-04/d6fa08ea-a200-41fd-b72e-c202076e22b7/29tlrcoll_2904chn_182_1.jpg`பெரிய ரெளடி ஆகணும்னு ஆசை சார்' - 2 பேரைக் கத்தியால் குத்தி விட்டு போலீஸிடம் வசனம் பேசிய இளைஞர்கள்!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை அடுத்த ராஜபத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத் மற்றும் விஜயகுமார் என்ற இளைஞர்கள். இருவரும் ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். சுழற்சி முறையில் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர்கள் கடந்த புதன்கிழமை அன்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து ஊத்துக்கோட்டையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சுமார் 10 மணியளவில் திருவாலங்காட்டை அடுத்த கலியனூர் பகுதியை இருசக்கர வாகனத்தில் கடக்கும் போது, வாலிபர்கள் சிலர் நடு ரோட்டில் அமர்ந்துகொண்டு மது அருந்திக் கொண்டிருந்திருக்கின்றனர். சாலையின் குறுக்கே வழியை மறித்துக்கொண்டு 4 வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்ததால் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வினோத் வழிவிடுமாறு ஹாரனை அடித்திருக்கிறார். சரக்கடித்துக் கொண்டிருந்த போதை ஆசாமிகள் வினோத் ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்துள்ளனர். அதனையடுத்து, வாகனத்தில் வந்த வினோத் மற்றும் விஜயகுமார் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு இவர்களும் வாக்குவாதம் செய்ய, ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் தங்களிடம் குரல் உயர்த்திப் பேசிய இளைஞர்கள் இருவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டுத் தப்பிச் சென்று விட்டனர். அதில் படுகாயமடைந்த இளைஞர்கள் அலறித் துடித்துள்ளனர்.

Also Read: சென்னை: மனைவி மீது சந்தேகம்; ஆத்திரத்தில் நடந்த கொலை! - போலீஸாரிடம் கணவர் கூறிய அதிர்ச்சி காரணம்

அவர்களின் சத்தம் கேட்டுக் கூடிய கிராம மக்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த இளைஞர்கள் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து விட்டு காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கத்தி ஆழமாகச் சதையைக் கிழித்திருந்ததால் உயர் சிகிச்சைக்காகச் சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாகத் திருவள்ளூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று திருவாலங்காடு பகுதியில் குற்றவாளிகள் மறைந்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அப்பகுதியை திருவள்ளூர் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, அவர்களை கண்டு தப்பியோட முயன்ற 4 குற்றவாளிகளில் போலீசார் இருவரை மடக்கிப் பிடித்த நிலையில், இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றனர். அதில் இருவரும் தவறி விழுந்து படுகாயமடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. குற்றவாளிகள் 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் 2 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு 2 பேரைக் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

அங்கு விசாரித்ததில், தனியார் நிறுவன ஊழியர்களைக் கத்தியால் குத்தியது கலியனூர் சுரேஷ்(21), பாக்குப்பேட்டை சதீஷ் (25), ஏகாட்டூர் சோனால் (22) மற்றும் கடம்பத்தூர் பகவதி (19) எனத் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட போதை ஆசாமிகள்

கைது செய்யப்பட்ட இளைஞர்களை திருவள்ளூர் போலீசார் விசாரித்ததில் 4 பேரும் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணையில், `எப்படியாவது ஏரியாவுல பெரிய ரவுடி ஆகணும்னு எங்களுக்கு ஆசை சார், இந்த மாதிரி சின்ன சின்ன சம்பவங்கள் செஞ்சா தான் எங்க பேரு எல்லாருக்கும் தெரியவரும். அதனால தான் அந்த ரெண்டு பேர கத்தியால குத்துனோம்' என்று போலீசாரிடம் தெனாவட்டாக பதில் சொல்லியிருக்கின்றனர் போதை ஆசாமிகள்.

விசாரணையை முடித்த போலீசார் குற்றவாளிகள் 4 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமப்புறங்களில் சாலைகளில் மின் விளக்குகள் பொருத்தப்படாதது இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற ஒரு காரணமாக இருக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.



from Latest News https://ift.tt/3e4nnFW

Post a Comment

0 Comments