நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே இருக்கிறது வட்டமலை குள்ளங்காடு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரின் மனைவி தீபா (வயது 17). இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்து வந்த சண்முகத்துக்கு, கொரோனாவால் சரியாக வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தை நடத்துவதற்கு, அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியதாகவும் சொல்கிறார்கள்.

Also Read: நாமக்கல்: பிளஸ்-2 மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை - சரக்கு ஆட்டோ டிரைவரை தேடும் போலீஸ்!
வேலை கிடைக்காமல், வருமானம் இல்லாமல் போனதால், கடன் தொல்லை காரணமாக சண்முகம் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். பின்னர், தீபா, தன் குழந்தையை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் தீபாவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.
இதனால், வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றிருக்கிறார். இந்நிலையில்தான், தீபாவின் தாய் மகேஸ்வரி, தீபாவின் அக்கா வீட்டுக்காரர் சின்ராஜ் ஆகியோரின் வற்புறுத்தலின்பேரில், தீபா தன் குழந்தையை இரண்டரை லட்சத்துக்கு, திருப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு விற்பனை செய்துள்ளார்.
குழந்தை விற்பனைக்கு புரோக்கராக திருப்பூரைச் சேர்ந்த நாகராஜ் (61), அதற்கு உடந்தையாக குள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்தி (41) ஆகியோர் செயல்பட்டுள்ளனர். தற்போது, தீபா தன் தாயை விட்டுப் பிரிந்து நாமக்கல்லில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் உள்ளார். தன் குழந்தையின் நினைப்பு ஏற்படவே, தீபா குழந்தைகள் நல அலுவலரிடம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவரத்தைக் கூறினார். அதன்பேரில், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப்பிரியா குமாரபாளையம் காவல்நிலையத்தில் இதுகுறித்துப் புகார் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து, குமாரபாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பிறகு, குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த நாகராஜ் மற்றும் கார்த்தி ஆகியோரைக் கைது செய்தார்.
மேலும், குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த மகேஸ்வரி, தீபாவின் அக்கா கணவர் சின்ராஜ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், மகேஸ்வரியும் சின்ராஜும், மகேஸ்வரியின் இளைய மகளான 14 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/3aOUWK2
0 Comments