நெகிழிக்கு மாற்றாக வாழை இலையில் ஆடை, வாழை இலையில் பை, வாழை இலையில் கோப்பை தயாரிக்கலாம் என்று ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கரூர் அரசுப் பள்ளி மாணவர், ஐதராபாத் பிர்லா மற்றும் அறிவியல் கழகம்(பிட்ஸ் பிலானி) செல்ல தேர்வாகியுள்ளார். அதோடு, அந்த மாணவர் `இளம் விஞ்ஞானி இந்தியா - 2021' என்ற விருதையும் பெற்றுள்ளார்.

Also Read: கரூர்: பாதிக்குப் பாதியாக குறைந்த வெற்றிலை விலை... கலக்கத்தில் விவசாயிகள்!
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள பஞ்சப்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவர் பூவரசன்தான், அந்த மாணவர். இவர், பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார். `சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' நிறுவனம், 2020-21-ம் கல்வியாண்டிற்கான இளம் விஞ்ஞானி மாணவர்களைத் தேர்வு செய்யும் விதமாக, தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியை இணையவழியில் நடத்தியது. இதில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் விவசாயம், விண்வெளி, ரோபோடிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், செயலி மேம்பாடு ஆகிய துறைகளின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 1,080 அறிவியல் ஆய்வு கட்டுரைகளில், பூவரனின் ஆய்வுக் கட்டுரையும் ஒன்று. மொத்தம் சமர்ப்பிக்கப்பட்ட 1,080 ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து, இறுதிச் சுற்றுக்கு 135 சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில், விவசாயத்துறையில் விண்ணப்பித்திருந்த 283 ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து தேர்வான சிறந்த 14 ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றாக, பூவரசனின் ஆய்வுக்கட்டுரையும் இடம் பெற்றது. இதிலிருந்து, இறுதிச் சுற்றுக்கு விவசாயத் துறையில் தேர்வான நான்கு மாணவர்களில் ஒரு மாணவராக பூவரசன் தேர்வு பெற்று, கரூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் பஞ்சப்பட்டி கிராமத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். தேசிய அளவில் இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர் ப.பூவரசனுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்பீம் ராணி மற்றும் கிராம மக்கள் ஆகியோர் சேர்ந்து, பாராட்டுச் சான்று மற்றும் விருது வழங்கிப் பாராட்டினார்கள்.

இதுகுறித்து, மாணவர் பூவரசனிடம் பேசினோம்.
``சாதாரண குக்கிராமத்தில் பிறந்த நான், இதுவரை கரூரைத் தாண்டியதில்லை. ஆனால், ஐதராபாத் போகப்போகிறேன். இதை இன்னும் நம்ப முடியவில்லை. எனது வழிகாட்டி ஆசிரியர் தனபால் சார் ஆலோசனையோடு, இந்த ஆய்வுக் கட்டுரையைத் தயார் பண்ணி சமர்ப்பித்தேன். அது தேர்ந்தெடுக்கப்பட்டு, எனக்கு இளம் விஞ்ஞானி விருதும், ஐதராபாத் போகிற வாய்ப்பும் கிடைச்சுருக்கு.
கடந்த 24 -ம் தேதி இணையவழியில் ஜூம் கூட்டம் மூலம், `எனது பார்வையில் 2030-ம் ஆண்டில் இந்தியா' என்ற தலைப்பில், எனது அறிவியல் கண்டுபிடிப்பான நெகிழிக்கு மாற்றாக பசுமை பேனா, டீ, சாம்பார், ரசம் பார்சல் செய்யும் வகையில் வாழை இலை பை, வாழை இலை கோப்பை, வாழை இலை ஆடை, வாழை மரம் பாத்தி, வாழை மரம் உரச்சாறு தயாரித்து காட்சிப்படுத்தினேன். அதோடு, வரும் 2030-ம் ஆண்டில் தூய காற்று, தூய நீர், வளமான மண், தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட பசுமை பூமியை உருவாக்கும் வகையில், எனது கண்டுபிடிப்பு பற்றி மூன்று நிமிடங்களில் விளக்கமளித்தேன்.

அதனால், எனக்கு `இளம் விஞ்ஞானி இந்தியா 2021 விருது, பாராட்டுச் சான்று, ரூ.1,000 ஊக்கப் பரிசு உள்ளிட்டவை கிடைத்தது. அதோடு, மூன்று நாள்கள் ஐதராபாத், பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தை (பிட்ஸ் பிலானி) பார்வையிட தேசிய அளவில் தேர்வாகியுள்ள 38 மாணவர்கள் கொண்ட குழுவில் ஒருவனாக நானும் தேர்வு பெற்றுள்ளேன். அப்துல் கலாம் ஐயா போல் ஒரு சிறந்த விஞ்ஞானியாக வர வேண்டும், நமது விவசாயத்துக்கும், இயற்கைக்கும் அதைக் கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்ற லட்சியங்களை வைத்துள்ளேன். கண்டிப்பாக அதை சாதிப்பேன். அதற்கு ஊக்கமாக, இப்போது எனக்குக் கிடைத்துள்ள இந்த விருதையும் கருதுகிறேன்" என்றார் மகிழ்ச்சியாக.
from Latest News https://ift.tt/3e1D68T
0 Comments