https://gumlet.assettype.com/vikatan/2021-04/7f95b37a-2fa1-40ba-a78d-c54e2c877dc8/ster_1.jpg'ஆக்ஸிஜன் உற்பத்தியை காரணம் காட்டி ஸ்டெர்லைட்டைத் திறப்பதா?' கொந்தளிக்கும் போராட்டக்காரர்கள் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசும், உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஸ்டெர்லைட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் தினம்தினம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிராமங்களிலுள்ள வீடுகளில் கறுப்புக்கொடியேற்றி வாசல்களில் 'Ban Sterlite' என கோலமிட்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம்பட்டவர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து மனு அளித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்

அந்த மனுவில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி பணியைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது" என்பதை வலியுறுத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் பேசினோம், "உலகத்திலேயே வாழும் உயிர்ச் சூழலுக்காக 13 உயிர்களை பலி கொடுத்த ஊர் என்றால் அது தூத்துக்குடிதான். எனவே 13 பேரின் உயிர்த் தியாகத்தால் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்தி எனும் பெயரில் திறப்பதற்கு அனுமதி அளித்ததை நயவஞ்சக செயலாக கருதுகிறோம்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த ஒருநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை, மூன்றாண்டாகியும் இன்னும் முடியவில்லை. அந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இன்றுவரையிலும் நீதி கிடைக்கவில்லை. இந்த நிலையில், "ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம்" எனச் சென்னையில் இருந்துகொண்டு அனைத்துக் கட்சியினரும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த ஆலைக்கு அனுமதி கொடுத்து, அடிக்கல் நாட்டி திறந்து வைத்ததும் அதே கட்சிகள்தான். மக்களின் உணர்வைப் புரிந்து கொள்ளவில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மட்டும்தான் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியுமா? எவ்வளவோ மாற்றுவழிகள் உள்ளது.

வீடுகளில் போடப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு கோலம்

உற்பத்தியில் இருக்கும் எத்தனையோ ஆலைகள் இருக்கின்றன. ஆனால், மக்களின் எதிர்ப்புகள், உயிர்த் தியாகத்தால் மூடிக்கிடக்கும் இந்த நச்சு ஆலை மூலம்தான் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியுமா? ஆக்ஸிஜன் உற்பத்தியைக் காரணம் காட்டி, ஆலையைத் திறந்து காப்பர் உற்பத்தியை துவக்குவதுதான் ஆலை நிர்வாகத்தின் இலக்கு. ஆக்ஸிஜன் உற்பத்திக்கு நாங்கள் தடையாக நிற்கவில்லை. 'ஸ்டெர்லைட்' எனும் நச்சாலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக் கூடாது என்பதுதான் எங்களின் கோரிக்கை. ஆலைக்கு எதிரான போராட்டங்கள் தொடரும். தற்போது நடைபெறுவது முதற்கட்டப் போராட்டம்தான். இனி அடுத்தடுத்த கட்டங்களாக போராட்டம் விரிவடையும்" என்றனர்.



from Latest News https://ift.tt/3t6AAlK

Post a Comment

0 Comments