னகொரோனா இரண்டாவது அலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா இருக்கிறது. அங்கு பொதுமுடக்கம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடிவருகின்றனர். பல தொழில்கள்அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கிராமங்களில் படித்த பட்டதாரிகள் ஏராளமானோர் வேலை இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்கும் பாதிச் சம்பளம் என்கிற நிலைதான்.
தற்போது கொரோனாவால் அந்த வேலையும் பறிபோன பலர் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பியிருக்கின்றனர். அவர்கள் கிராமத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தங்களைப் பதிவு செய்துகொண்டு குளத்தில் தொழிலாளர்களாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

கர்நாடகாவிலுள்ள ஹவேரி என்ற மாவட்டத்தில் கொரோனாவுக்குப் பிறகு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்ய 4,842 பேர் தங்களைப் பதிவு செய்துகொண்டிருக்கிரார்கள். அவர்களில் அதிகமானோர் மிகவும் அதிகம் படித்தவர்கள் என்று ஜில்லா பரிஷத் அதிகாரி மொகமத் ரோஷன் தெரிவித்தார். பட்டதாரிகள், முதுகலைப்பட்டதாரிகள் மற்றும் டெக்னீஷியன் படிப்புகள் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாவட்டத்திலுள்ள மாலாகுந்த் கிராமத்தில் மட்டும் 24 பட்டதாரிகள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் தங்களைப் பதிவு செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களில் நான்கு பேர் பிஹெச்.டி பட்டதாரிகள். 12 பேர் முதுகலைப்பட்டதாரிகள். அதிகம் படித்திருந்தாலும் எந்தவித கௌரவத்தையும் பார்க்காமல் குளத்தைத் தூர்வாருதல் போன்ற உடல் உழைப்பு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றனர் என்றும் ரோஷன் தெரிவித்தார். பி.டி.ஒ அதிகாரி ரேணுகாவும் இதை உறுதிபடுத்தினார்.
எம்.ஃபில் முடித்துவிட்டு கிராம வேலை உத்தரவாத திட்டத்தில் பணி செய்யும் சித்தலிங்கேஷ் புஜார் இது குறித்துக் கூறுகையில், ``ஆசிரியர் வேலைக்கு இப்போது ஆட்கள் எடுப்பதாகத் தெரியவில்லை. எனது கல்வித்தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் எனது குடும்பத்துக்காக உழைக்கிறேன்" என்று தெரிவித்தார். இந்த ஒரு கிராமத்தில் மட்டும் 24 பட்டதாரிகள் என்றால் இது போன்று கர்நாடகாவிலுள்ள கிராமங்களில் எத்தனையோ பட்டதாரிகள் படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமல் குளத்தை தூர்வாரிக்கொண்டிருக்கின்றனர் என்பதே நிதர்சனம்.
from Latest News https://ift.tt/3nx6k2f
0 Comments