https://gumlet.assettype.com/vikatan/2021-04/2d8af72c-72a7-4af2-8ef7-ac9a0fa39359/jpg.jpg'முககவசம் அணியாததற்கு அபராதம்; போலீஸ் மீது நாயை ஏவிவிட்ட கடைக்காரர்!' - மும்பையில் பரபரப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்துக்கு நிகரான கட்டுப்பாடுகள் இருக்கிறது. இதனால் மளிகை கடைகள், பால்கடைகள், காய்கறிக்கடைகள் என அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் காலை 7 மணியிலிருந்து காலை 11 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கைதான குப்தாவும், கடை ஊழியரும்

எஞ்சிய கடைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்த கட்டுப்பாடுகள் இம்மாதம் இறுதிவரை இருந்தது. இது மே 15ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களை பிடிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

மும்பைக்கு அருகில் உள்ள கல்யாண்-டோம்பிவலி மாநகராட்சியில் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது. டோம்பிவலியில் கடை அடைப்பதற்கான நேரம் முடிந்த பிறகு நான்கு போலீஸார் மற்றும் 4 மாநகராட்சி ஊழியர்கள் எங்காவது கடை திறந்திருக்கிறதா என்றும் யாராவது முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றுகின்றனரா என்பதையும் கண்காணித்துக்கொண்டே ரோந்துப்பணியில் சென்றனர்.

கைது

கம்பல்பாடா பகுதியில் கடை நடத்தி வரும் சத்யநாராயண் குப்தா (43) என்பவர் காலை 11 மணிக்கு பிறகும் கடையை திறந்து வைத்திருந்ததோடு முகக்கவசம் அணியாமல் கடைக்கு வெளியில் இரண்டு ஊழியர்களுடன் அமர்ந்திருந்தார். உடனே அங்குசென்ற போலீஸார் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேட்டு அதற்காக மூன்று பேருக்கும் சேர்த்து ரூ.1500 அபராதம் கட்டும்படி கூறினர். ஆனால் அபராதம் கொடுக்கமுடியாது என்று கூறி குப்தா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் வாய்த்தகராறு முற்றியது. அந்நேரம் குப்தா வளர்த்துவந்த இரண்டு நாய்கள் அருகில் நின்று கொண்டிருந்தது. உடனே அந்த நாய்களை போலீஸார் மீது ஏவிவிட்டார் குப்தா. இதனால் இரண்டு நாய்களும் போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை பார்த்து குரைக்க ஆரம்பித்தது. அதில் ஒரு நாய் போலீஸ்காரர் ஒருவரை கடித்துவிட்டது. உடனே போலீஸார் குப்தாவையும், அவரது ஊழியர் ஆனந்த்தையும் கைது செய்தனர். மற்றொரு ஊழியர் ஆதித்யா தப்பி ஓடிவிட்டார். நாயிடம் கடிபட்ட போலீஸ்காரர் மருந்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார்.



from Latest News https://ift.tt/3gQRqTg

Post a Comment

0 Comments