https://gumlet.assettype.com/vikatan/2021-04/dbd51763-2daa-4742-b324-c70f6b3ee1d5/Covid_death_696x392.jpgகொரோனா: இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய 1 ரூபாய்க் கட்டணம்! - மனம் நெகிழ வைக்கும் நகராட்சி அதிகாரிகள்

இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா மரணங்களை பயன்படுத்திக் கொண்டு, இறுதிச் சடங்குகள் செய்யும் நிறுவனங்கள் உடல்களைத் தகனம் செய்வதற்கு அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது.

பொதுவாக, ஒருவர் உயிரிழந்து விட்டால் அவரது உடலுக்கு உற்றார் உறவினர்கள் சூழ இறுதிச் சடங்குகள் முறைப்படி செய்வதை இறந்தவருக்கு செய்யும் இறுதி மரியாதையாக கருதப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அருகில் செல்வது பாதுகாப்பற்றதாகக் கருதப்படுகிறது. கொரோனாவால் ஒருவர் உயிரிழந்து விட்டால், அந்த உடல் மருத்துவமனையில் இருந்து நேராக மயானம் கொண்டு செல்லப்படுகிறது.

இரவு பகலாக எரிந்துகொண்டிருக்கும் சடலங்களால் பல்வேறு இடங்களில் மக்கள் சடலங்களை வைத்துக்கொண்டு வரிசையில் காத்திருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் களத்தில் இறங்கி கொரோனா நோயாளிகளின் உடலைத் தைரியமாகக் கையாண்டு தகனம் செய்யும் இறுதி சேவை நிறுவனங்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்களிடத்தில் குறைந்தது 20,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,00,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலித்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா

இந்த நேரத்தில் அவர்கள் செய்யும் வேலைக்கு அந்த தொகையானது ஏற்றது தான் என்று அவர்கள் வாதிட்டாலும், அவ்வளவு பெரிய தொகையினை ஏழை எளிய மக்களால் எப்படிக் கொடுக்க முடியும் என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் எழுகிறதல்லவா..?, இதே கேள்வி தெலங்கானா மாநிலத்தின் கரீம்நகர் நகராட்சி அதிகாரிகளின் மனதிலும் எழுந்திருக்கிறது. அதன் விளைவாக உதித்த திட்டம் தான் '1 ரூபாய்க்கு 1 உடல் தகனம்'. ஆம், கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் வருமானம் ஈட்டி தரும் குடும்ப உறுப்பினர்களை இழந்துவிட்டு நிர்க்கதியான நிலையில் மருத்துவமனையிலிருந்து மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்வதற்கு கூட பணமில்லாமல் தவிக்கும் ஏழை எளியவர்களுக்கான திட்டம்தான் இது.

தெலங்கானாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதன் காரணமாக கரீம்நகர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக கரீம்நகரில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் பிரேதங்களைத் தகனம் செய்வதற்கு இடைத்தரகர்களும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் எளிய மக்கள் இடைத்தரகர்கள் கேட்கும் தொகையை அளிக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

கரீம்நகர்

இந்நிலையில், இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க கரீம்நகர் நகராட்சி அதிகாரிகள் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்போரின் உடல்களைத் தகனம் செய்ய, உறவினர்களிடம், 1 ரூபாய் மட்டும் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு அவரவர் மத மற்றும் சம்பிரதாய முறைப்படி தகனம் செய்து வருகின்றனர். கொரோனா முதலாம் அலையின் போதே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திய கரீம்நகர் நகராட்சி அதிகாரிகள் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை மட்டும் 158 உடல்களைத் தகனம் செய்திருக்கின்றனர்.

இந்த திட்டம் குறித்து கரீம்நகர் நகராட்சி ஆணையர் வள்ளூரி கிராந்தி கூறுகையில்,``கரீம்நகரில் கொரோனா தாக்கத்தையும் மக்களின் அச்சத்தையும் மூலதனமாக வைத்து இடைத்தரகர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மக்களை ஏமாற்றி மிக அதிக கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். பணம் படைத்தவர்களுக்கு இது பெரிய விஷயம் இல்லை என்றாலும், ஏழை எளிய மக்களால் இந்த தொகையை நிச்சயம் கொடுக்க முடியாது. எனவே தான் நாங்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு இக்கட்டான சூழலில் உதவி வருகிறோம். இந்தாண்டின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை மொத்தம் 49 கொரோனா நோயாளிகளின் உடல்களை மத, சம்பிரதாய முறைப்படி 1 ரூபாய்க்கு தகனம் செய்திருக்கிறோம். இது முழுக்க முழுக்க இடைத்தரகர்களைத் தவிர்க்கும் மக்கள் நல நடவடிக்கை' என்றார்.

கொரோனா மரணங்கள்

சூழலைப் பயன்படுத்தி மக்களிடம் ஆயிரக்கணக்கில் வசூலித்து வரும் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு மத்தியில் 1 ரூபாய்க்கு மனிதாபிமான அடிப்படையில் சடலங்களை தகனம் செய்து வரும் கரீம்நகர் நகராட்சிக்கு துயரக் கரங்களுடன் இறந்தவர்களின் உறவினர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.



from Latest News https://ift.tt/2PAaBWb

Post a Comment

0 Comments