சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 29.5.2021-ல் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் 2014-ம் ஆண்டு அண்ணாநகர் ஹெச் பிளாக், 1-வது மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த தற்காப்பு கலை பயிற்சியகத்தில் சேர்ந்து பயிற்சி வந்தேன். அதை கெபிராஜ் என்பவர் நடத்திவருகிறார். ஜூடோ போட்டிக்காக நாமக்கலுக்கு காரில் பயிற்சியாளர் கெபிராஜ் என்பவருடன் சென்றேன். பின்னர் காரில் திரும்பிவரும்போது பயிற்சியாளர் கெபிராஜ், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியில் சொன்னால் என்னை அவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார். எனவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் கெபிராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதன்பேரில் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின்படி கெபிராஜ் (44) என்பவர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பிஎஸ்.பி.பி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள், இந்நாள் பள்ளி மாணவிகள் புகாரளித்தன் பேரில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம். 29-ம் தேதி அண்ணாநகரில் உள்ள பி.எஸ்.பி.பி. பள்ளியில் ஜூடோ மாஸ்டராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது அவரிடம் பயிற்சி பெற்ற இளம்பெண் ஒருவர் புகாரளித்திருக்கிறார். அதுதொடர்பாக கெபிராஜ், அவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்.
கெபிராஜ், பி.எஸ்.பி.பி. பள்ளியில் மாஸ்டராக பணியாற்றியிருப்பதால் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லைக் கொடுத்தாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை பி.எஸ்.பி.பி பள்ளி மாணவிகள் தரப்பில் புகார்கள் வரவில்லை. விசாரணைக்குப்பிறகு மாஸ்டர் கெபிராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தொடர்ந்து சென்னையில் உள்ள முக்கியமான சில தனியார் பள்ளிகளில் படித்த மாணவிகள் கொடுத்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்" என்றார் .
Also Read: பாலியல் குற்றச்சாட்டு: பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!
ஏற்கெனவே மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் ஆசிரியர் ஆனந்த், தடகள பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. இதில் பயிற்சியாளர் நாகராஜன், கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனந்த், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் உள்ள முக்கியமான தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறிவரும் சூழலில் செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 900 பேர், பாலியல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்கள். மாணவிகளின் புகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த தொடங்கியிருக்கிறது. அதனால் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்த ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது
from Latest News https://ift.tt/3fAWyK9
0 Comments