https://gumlet.assettype.com/vikatan/2021-05/29953620-be73-4805-8260-25ff71c56260/FB_IMG_1622373188718.jpg`அதிகாரிகளோ, ஆட்சியில் இருந்தவர்களோ.. யாராக இருந்தாலும் நடவடிக்கை!' - பால்வளத்துறை அமைச்சர் நாசர்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கீழ் செயல்படும் ஆவின் பாலகங்களின் வாயிலாக விற்பனைச் செய்யப்படும் பால், நெய் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட விலையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து இன்று அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பால்பண்ணை ஆய்வகங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 53 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து நாள் ஒன்றிற்கு தோராயமாக 6,600 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், தேவைக்கேற்ப திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஒன்றியங்களிலிருந்து 15,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மொத்தமுள்ள 18,600 லிட்டர் பாலையும் பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், பால்கோவா, பாதாம் பவுடர், ஐஸ்கிரீம், சாக்லேட், தயிர் மற்றும் மோர் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. அவை ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு

மருத்துவமனைகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் கடன் அடிப்படையில் பால் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் சலுகை விலையில் பால் அட்டை முறையில் பால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புபடி மக்களின் பயன்பாட்டிற்காக விற்கப்படும் ஆவின் பால் லிட்டர் ஒன்றிற்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழக அரசால் குறைக்கப்பட்ட விலையில் ஆவின்பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும், நுகர்வோர் தேவைக்கேற்ப ஆவின்பால் இருப்பு இருக்கிறதா என்பது குறித்தும் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைளை துரிதப்படுத்தும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆவின் நிறுவனத்தை பொறுத்த வரையில் 36 லட்சம் லிட்டர் ஒரு நாளைக்கு பால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பால் உற்பத்தி 39 லட்சம் லிட்டராக உயர்ந்திருக்கிறது. அதைபோன்று விற்பனை விகிதமும் மூன்று லட்சம் லிட்டர் உயர்ந்திருக்கிறது. பால் பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவான வசதியினையும், உற்பத்தி செய்கின்ற பாலை சரியான முறையில் உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு பதப்படுத்தப்பட்ட பின் முறையாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறோம்.

பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு

மாட்டுக்கான தீவனங்கள் அரசு சரியான விலையில் வழங்குகிறது. ஆனால் விற்பனை செய்பவர்கள் அதிக விலைக்கு விற்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தார்கள். ஆனால் சில இடங்களில் ஒரு ரூபாய் அதிகரித்து விற்பனை செய்தார்கள். சென்னை புறநகரில் மட்டும் கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்த 11 கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம். நேற்று சென்னையில் ஒரு கடை சீல் வைத்தோம். தஞ்சாவூரில் இரண்டுகடைகளுக்கு சீல் வைத்துள்ளோம். அதுபோல மாட்டு தீவனங்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குமரி ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில் பணியாளர் நியமனத்தில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக முன்னாள் அதிகாரி ஒருவர் கடிதம் எழுதியிருப்பதாக கூறுகிறீர்கள். அதிகாரிகள் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும். பழைய ரிக்கார்டுகள் எல்லாம் எடுக்க ஆரம்பிச்சிருக்கிறோம். அதில் அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் சரி, ஆட்சியில் இருந்தவர்கள் தவறு செய்திருந்தாலும் சரி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



from Latest News https://ift.tt/3vzKcYr

Post a Comment

0 Comments