https://gumlet.assettype.com/vikatan/2021-05/ecc5f200-302b-406f-8aa8-08c645d92dc6/BL11_POL_JAG.jpgஆந்திரா: `2 வருடத்தில் 94.5% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன்!' - ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் 2019-ல் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக 3-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

ஆந்திராவில் ஆட்சி அமைக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 வருட காலம் தேவைப்பட்டது. தன் தந்தை ராஜசேகர ரெட்டியின் மறைவிற்குப் பிறகு காங்கிரஸிலிருந்து வெளியேறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற புது கட்சி துவங்கிய ஜெகன்மோகன் ரெட்டியை ஆந்திர மக்கள் அவ்வளவு எளிதில் அரவணைத்து விடவில்லை. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்டது, சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்கு எதிராக 13 மாதங்கள் 3,000 கிலோமீட்டர்கள் நடைப்பயணம் மேற்கொண்டது எனத் தொடர்ந்து படிப்படியாகக் காய் நகர்த்திய ஜெகன்மோகனுக்கு 2019 சட்டசபைத் தேர்தலில் தான் வெற்றிமாலை கழுத்தில் விழுந்தது.

ஜெகன்மோகன் ரெட்டி

தன் தந்தை ராஜசேகர ரெட்டியின் மறைவிற்குப் பிறகு சுமார் 10 வருடங்கள் போராடி செல்வாக்கை மீட்டெடுத்திருக்கும் ஜெகன்மோகன் ஆந்திர முதல்வராக 2 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். ஒய்.எஸ்.ஆர் ரைத்து பரோசா (YSR Rythu Bharosa), ஆரோக்யஸ்ரி (Aarogyasri), ஜலாயக்னம் (Jalayagnam), அம்மா வோடி (Amma Vodi), ஒய்.எஸ்.ஆர் ஆசாரா (YSR Aasara), சேயுதா திட்டம் (Cheyutha Scheme) மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகம் செய்து ஆந்திர மக்களின் தேவைகளை அறிந்து ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு வருவதாக ஒய்.எஸ்.காங்கிரஸ் கட்சியினர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "கடவுளின் கிருபையினாலும், மக்களின் ஆசீர்வாதத்தாலும் இந்த இரண்டு ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் வழங்கியிருந்த வாக்குறுதிகள் அனைத்தும் தவறாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. நேரடியாகப் பொதுமக்களுக்கு ரூ. 95,528 கோடியும், பல்வேறு திட்டங்களின் மூலமாக ரூ. 36,197 கோடியும் சென்றடைந்துள்ளன" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், "இரண்டு வருடங்கள் நிறைவு செய்திருக்கிறேன் மக்களின் முதல்வராக. இந்த பயணம் ஒரு மன நிறைவான பயணம் என்று தான் சொல்ல வேண்டும். மக்களின் ஆதரவுடன் ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகளை 94.5 சதவிகிதம் நிறைவேற்றி இருக்கிறது என்பதனை நான் மிகவும் பெருமையாகக் கூறுகிறேன்.

நாங்கள் கூறிய மற்றும் நிறைவேற்றியவை குறித்து முழுமையாக ஆவணம் வடிவில் ஆந்திர மக்கள் அனைவருக்கும் வழங்கவிருக்கிறோம். மாநிலத்தில் 66 சதவிகித பெண்கள் அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயனடைந்திருக்கின்றனர். அந்த தகவல்களும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த 2 வருடகாலத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மீதமுள்ள 3 ஆண்டுக்காலத்தில் சிறப்பாகச் செயல்பட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும் ஜெகன்மோகன் ரெட்டி, 2 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை ஒட்டி ‘Rendo Yeta Ichhina matake pedda peeta’ என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளைக் கடிதமாக வெளியிட்டுள்ளார். அதே போல் ஒய்.எஸ்.ஆர்-இன் 2019 தேர்தல் வாக்குறுதிகளை “Maliyedu- Jagananna Thodu, Jagananna Manifesto 2019" என்ற ஆவணமாகவும் வெளியிட்டுள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அந்த கடிதத்தில் சில முக்கிய நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

‘Rendo Yeta Ichhina matake pedda peeta’

அது தொடர்பாக ஜெகன்மோகன் தெரிவிக்கையில், ஆந்திராவில் மொத்தமுள்ள 1,64,68,591 குடும்பங்களில் 1,41,52,386 குடும்பங்கள் அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாகப் பயனடைந்துள்ளதாகவும், ஆரோக்கிய ஸ்ரீ, ஜெகண்ணண்ண தோடு, கோருமுதா மற்றும் ஒய்.எஸ்.ஆர் சம்பூர்ணா போஷனா போன்ற பல்வேறு திட்டங்கள் எந்தவித ஊழல் பின்னணிகளும் இன்றி மக்களுக்கு நேரடியாக வெளிப்படையாகச் சென்றடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இரண்டாண்டு ஆட்சி நிறைவடைந்ததை முன்னிட்டு அமராவதியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சஜ்ஜால ராமகிருஷ்ண ரெட்டி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "ஆந்திராவில் மக்கள் தேவைகளை அறிந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செயலாற்றிக் கொண்டிருக்கிறார். மாநிலத்தில் கடந்த 15 வருட காலத்தில் ஆட்சியாளர்கள் யாரும் செய்திடாத காரியங்களை முதல்வர் இரண்டே வருடத்தில் செய்து காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று எனப் பல சவால்களை அவர் திறம்படக் கையாண்டு வருகிறார். எந்த முதல்வரும் செய்திடாத மக்கள் நலப் பணிகளைச் செய்து இந்தியாவின் ரோல் மாடலாக ஜெகன்மோகன் ரெட்டி திகழ்கிறார். ஜெகன்மோகன் ரெட்டி தனது தேர்தல் வாக்குறுதிகளைப் பைபிளாக, குரானாக, பகவத் கீதையாக மதிக்கிறார். அதனால் தான் அதில் 95% வாக்குறுதிகளை இரண்டே வருடத்தில் நிறைவேற்றி இருக்கிறார்" என்றார்.

ட்விட்டரில் "2 years for YS Jagan ane Nenu" என்ற ஹாஷ்டேக் நேற்றைய தினம் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஹாஷ்டேக் உருவான 3 மணி நேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது. முழுமையாக 2 வருடங்கள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயலாற்றி இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசாங்கத்தின் மீதமுள்ள 3 ஆண்டுகால ஆட்சி குறித்த எதிர்பார்ப்பு ஆந்திர மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.



from Latest News https://ift.tt/3c2Ryfq

Post a Comment

0 Comments