கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் சில பகுதிகளில் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் வீசப்பட்டு மிதந்து கொண்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பத்திரிகைகளில் தலைப்பு செய்தி ஆனதை அடுத்து இரு மாநில அரசுகளும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டிக் கொண்டன. அதனையடுத்து உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் கங்கை நதிக்கரையில் போலீசார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். இந்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் தற்போது மீண்டும் உத்தரப்பிரதேசத்தின் ராப்தி ஆற்றில் கொரோனா நோயாளியின் சடலம் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாலத்தின் மேலிருந்து இரு நபர்கள் சடலம் ஒன்றினை ஆற்றில் வீசும் 45 நொடி வீடியோ ஒன்று கடந்த சில நாள்களாக அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இணையத்தில் வீடியோ தீயாகப் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து உத்தரப்பிரதேச போலீசார் வீடியோ குறித்து விசாரித்தனர். அதில் வீடியோ உத்தரப்பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தின் ராப்தி ஆற்றின் பாலத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி விஜய் பகதூர் சிங் தெரிவிக்கையில், "இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வரும் வீடியோவில் சித்தார்த் நகர்ப் பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவரின் உடலை அவரது உறவினர்கள் இருவர் ராப்தி ஆற்றில் வீசுகின்றனர். பிரேம்நாத் இம்மாதம் 28-ம் தேதி அன்று மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர தொற்று பாதிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் 28-ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடலை மருத்துவமனை நிர்வாகம் அவரது உறவினர்களிடம் மயானத்தில் வைத்து ஒப்படைத்தது.ஆனால் பிரேம்நாத்தின் உறவினர்கள் சடலத்தை மயானத்தில் வைத்து தகனம் செய்யாமல் ராப்தி ஆற்றில் கொரோனா கவச உடைகளுடன் சென்று கொட்டும் மழையில் வீசியிருக்கின்றனர்" என்றார்.
மேலும் சம்பவம் தொடர்பாக பலராம்பூர் காவல்துறையினர் கூறுகையில், "45 நொடிகள் நீடிக்க கூடிய அந்த வீடியோவினை கொட்டும் மழையில் காரில் இருந்தபடி பொதுமக்கள் சிலர் பிரேம்நாத்தின் உறவினர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்து, அதை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அது தற்போது மக்களிடையே பரவி பீதியைக் கிளப்பியிருக்கிறது. மாநிலத்தின் அனைத்து நதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இந்த நபர்கள் செய்துள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது. நாங்கள் விசாரித்ததில், ஆற்றில் சடலத்தை வீசி சென்றது சஞ்சய் மற்றும் காசிராம் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா விதிமுறைகளைத் தகர்த்தெறிந்து, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அவர்கள் 2 பேர் மீதும் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் நோய்த் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்" என்றனர்.
மருத்துவமனையிலிருந்து தகனம் செய்வதற்காக மயானத்தில் ஒப்படைக்கப்பட்ட கொரோனா நோயாளியின் சடலத்தை உறவினர்கள் ஆற்றில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest News https://ift.tt/3vOAW2V
0 Comments