பிரதமர் நரேந்திர மோடி தலைமையான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இது குறித்து மகாராஷ்டிரா அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் சவான் அளித்த பேட்டியில், ``மத்திய அரசு முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் வைத்துக்கொண்டுள்ளது.
ஆனால் கொரோனா கட்டுக்கடங்காமல் போனதும் மாநில அரசு மீது குறை சுமத்துகிறது" என்று தெரிவித்தார். மத்திய அமைச்சரவையில் உங்களுக்கு பிடித்த அமைச்சர் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டதற்கு, ``மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பற்றி நல்ல வார்த்தைகள் பேசலாம். கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மற்ற கட்சிகளுடன் பேசுவதை நிதின் கட்கரி வழக்கமாக கொண்டுள்ளார். அவர் தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர். மகாராஷ்டிரா மீது சாதகமான அணுகுமுறையை கொண்டவர். ஆனால் அவரது அதிகாரங்கள் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. 12.21 கோடி மக்கள் தங்களது வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். தனி நபர் வருமானம் இந்தியாவை விட பங்களாதேசில் அதிகமாக இருக்கிறது. மத்திய அரசின் கொள்கைகள் நாட்டை அழிக்கிறது. உதவிகள் வழங்குவது, ஜி.எஸ்.டி.இழப்பீடு வழங்குவது உட்பட அனைத்து மட்டத்திலும் மத்திய அரசு மகாராஷ்டிராவை பாரபட்சமாகவே நடத்துகிறது. மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள்தான் இதற்கு தீர்வு கொண்டு வரவேண்டும். இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்ட பா.ஜ.க எம்பி சாம்பாஜி, அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச முயற்சிப்பது வரவேற்கதக்கது” என்று தெரிவித்தார்.
`மத்திய அமைச்சரவையில் இருக்கும் மகாராஷ்டிராவை சேர்ந்த நிதின் கட்கரி, மகாராஷ்டிராவுக்கு கொரோனா சிகிச்சை மருந்து போதிய அளவு கிடைக்கும் வகையில் ரெம்டெசிவிர் மருந்தை மகாராஷ்டிராவிலேயே தயாரிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, கட்கரியை ஓரங்கட்டியே வைத்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தயவில் கட்கரி தொடர்ந்து மத்திய அமைச்சராக இருக்கிறார்’ என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.
இதற்கிடையே மும்பையில் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தென்மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வெளியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நவிமும்பையிலும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது. சனிக்கிழமை மத்தியில் பாஜக அரசு பதவியேற்று 7 ஆண்டுகள் ஆவதையொட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
from Latest News https://ift.tt/3fUIvhy
0 Comments