திருமணமான தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று சீனா இன்று அறிவித்துள்ளது. உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா என்பதை நாம் அறிவோம். ஆனால், அங்கும் பிறப்பு எண்ணிக்கையில் வியக்கத் தக்க அளவு சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த அதிரடி மாற்றம். ஏற்கெனவே உள்ள இரண்டு குழந்தைகள் என்ற வரம்பிலிருந்து இப்போது மூன்று குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது சீனாவில் மிகப் பெரிய கொள்கை மாற்றம் என்று கருதப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடந்த அரசியல் கூட்டத்தின்போது இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டில்தான் இதற்கு முந்தைய மாபெரும் மாற்றம் நடந்தது.
சீனாவில் பல பத்தாண்டுகளாக இருந்து வந்த 'ஒரே ஒரு குழந்தை' என்ற கொள்கை முடிவை ரத்து செய்தது அப்போதுதான். இது போன்ற கொள்கை முடிவுகள் ஆரம்பத்தில் மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டன.
இரண்டாவதாக வந்ததுதான் 'இரண்டு குழந்தை' வரம்பு. அப்போதும் இப்போதும் சீன நகரங்களில் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவு மிக அதிகமாகவே இருக்கிறது. அதனால் இரண்டாவது குழந்தைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும்கூட, பல தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்தச் சூழலில்தான், "பிறப்புக் கொள்கையை மேலும் மேம்படுத்தும் வகையில், திருமணமான தம்பதியினர் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்கிற வரம்பை அரசு அமல்படுத்தும்" என்று அரசு அறிவித்துள்ளது.
இந்தக் கொள்கை மாற்றம் இதற்கே உரித்தான ஆதரவு நடவடிக்கைகளுடன் செயல்படுத்தப்படும். இது நம் நாட்டின் மக்கள்தொகை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கும். வயதான மக்களைச் சிறப்பாகப் பராமரிப்பதற்கும், மனித வளங்களின் நன்மைகளை நாட்டின் வளர்ச்சிக்கு நல்லமுறையில் பயன்படுத்தவும் இது உதவும்" என்றும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். எனினும், என்னவிதமான ஆதரவு நடவடிக்கைகள் செய்யப்படும் என அவர் குறிப்பிடவில்லை. இந்த அறிவிப்பு சீன சமூக ஊடகங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சீனாவில் இந்த மாதத் தொடக்கத்தில் எடுக்கப்பட்டது. 1950-களில் இருந்து பல பத்தாண்டுகளில் மக்கள்தொகை மிக மெதுவான விகிதத்தில் உயர்ந்திருப்பது (1.41 பில்லியன்) இப்போதுதான் என்பதை மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதோடு, 2020-ம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.3 குழந்தைகள் என்கிற குறைவான கருவுறுதல் விகிதமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வயதானவர்கள் அதிகம் வாழும் ஜப்பான், இத்தாலி போன்ற சமுதாயங்களுடன் சீனாவும் இணையக்கூடுமோ என்கிற கவலையும் எழுந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து சீனாவின் பொலிட்பீரோ கூட்டம் இன்று நடந்தது. நாட்டின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது பற்றி அங்கு பேசப்பட்டது. ஆனால், எந்த விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை. அரசு என்னவோ மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாமென அறிவித்துவிட்டது. ஆனால், குழந்தை வளர்ப்புக்கான செலவுகளை எண்ணி மிரளும் சீனர்களின் முகங்களில்தான் மழலைச் செல்வ மகிழ்ச்சியைப் பார்க்க முடியவில்லை!
- எஸ். சங்கீதா
from Latest News https://ift.tt/3wNT90e
0 Comments