https://gumlet.assettype.com/vikatan/2019-08/7ed2fb28-b765-43b8-989e-0d87b900cda4/63D315A4_A8A3_49D9_9C24_928D71881A81_L_styvpf_18421.jpg“கொடுக்க நினைக்கும் முதல்வர்; காலியான கஜானா ”- நெருக்கடியில் பட்ஜெட் கூட்டத்தொடர்!

“தி.மு.க அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரை சிறப்பாக நடத்த முதல்வர் முடிவெடுத்துள்ளார். இதற்கான வேலைகள் தலைமை செயலகத்தில் விறுவிறுப்பாக நடக்கத் தொடங்கியுள்ளது” என்கிறார்கள் தமிழக அரசில் பணிபுரியும் உயர் அதிகாரிகள்.

தலைமை செயலகம்

தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு அதன் முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடந்துமுடிந்தது. இதனைத் தொடர்ந்து ஜீலை 1-ம் தேதி முதல் மீண்டும் சட்டமன்றக் கூட்டம் நடக்கலாம் என்கிற பேச்சு முதலில் இருந்தது. ஆனால், தமிழக அரசின் நிதி நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. இதனால் தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்ன பல திட்டங்களைக்கூட நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதை நிதித்துறை, முதல்வர் காதில் போட்டது.

இதனைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் முதல்வர் ஏற்கனவே ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு முதலில் தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட முடிவெடுக்கப்பட்டது. இதனை சட்டமன்றத்திலும் நிதி அமைச்சர் அறிவித்தார். இதன்பிறகே சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை தள்ளிவைக்கும் முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளனர். வரும் ஜூலை முதல் வாரம் வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார்கள்.

பழனிவேல் தியாகராஜன்

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் துறைகள் வாரியாக ஆய்வுக்கூட்டத்தை துறை அமைச்சருடனும், அதன்பிறகு முதல்வருடனும் சேர்ந்து நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு வந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு துறையிலும் தேவைகள் என்ன இருக்கிறது, எவ்வளவு நிதி ஆதாரங்கள் உள்ளன போன்ற விவரங்களையும், கடந்த பத்து ஆண்டுகளில் துறைகளில் நடந்த செலவீனங்கள் பற்றியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்க இருக்கிறார்கள். தற்போது பல துறைகளில் நிதி ஆதாரங்கள் இல்லாமல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் கடனும் அதிகரித்துள்ளது. இதையெல்லாம் முதலில் ஆய்வு செய்து ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதியை முடிவு செய்தபிறகு நிதி அமைச்சரே பட்ஜெட்டின் முகவுரையை தயார் செய்ய இருக்கிறாராம். இந்தப் பணிகளுக்கு இன்னும் மூன்று வாரங்கள் தேவைப்படும் என்பதால் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஜூலை மூன்றாவது வாரம்வரை கூட்ட வேண்டாம் என்று நிதித்துறையிலிருந்து முதல்வருக்கு குறிப்பு சென்றிருக்கிறது.

சட்டமன்றம்

இதுபற்றி முதல்வரும் நிதித்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக பெட்ரோல் விலையை குறைப்பதற்கான முகாந்திரமாவது பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும், அதேபோல் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் மாதம்தோறும் வழங்கும் திட்டத்தையும் துவக்கிவிட வேண்டும் என்கிற விருப்பத்தில் முதல்வர் இருக்கிறார். ஆனால், இதற்கு நிதி நிலை இடம்கொடுக்குமா என்பதை ஆய்வுக்கு பிறகே சொல்லமுடியும் என்பதை நிதியமைச்சர் விளக்கி இருக்கிறார்.

தலைமை செயலகம்

இந்த ஆய்வுக்கூட்டங்களை முறையாக நடத்தி நிதி ஆதாரங்கள் மற்றும் செலவீனங்களை முறைப்படுத்திய பிறகே பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். இதனால் ஜூலை மாதம் 3-வது வாரம் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க இருக்கிறதாம். இதற்கு முன்பாக வெள்ளை அறிக்கையை வைத்து தி.மு.க அரசு வீரியமாக அரசியல் செய்யும் என்கிறார்கள்!



from Latest News https://ift.tt/3qCpvsZ

Post a Comment

0 Comments