https://gumlet.assettype.com/vikatan/2021-06/01779b8f-0b56-424f-8b88-ee4810160e98/WhatsApp_Image_2021_06_30_at_11_40_15.jpegதமிழக டிஜிபி சைலேந்திரபாபு: `அரசு பள்ளியில் படித்தவர்.. ரௌடிகளுக்கு சிம்ம சொப்பனம்!’ -முழு பின்னணி

தமிழக காவல்துறையின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. தற்போதுள்ள டி.ஜி.பி திரிபாதி ஓய்வுபெற்றதையொட்டி இன்று சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பதவியேற்றார்.

சைலேந்திரபாபுவின் பயோடேட்டாவை விரிவாக பார்ப்போம்..!

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் 1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 5- ம் தேதி சைலேந்திரபாபு பிறந்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அரசு உயர்நிலை பள்ளியில் படித்து, தமிழக காவல்துறை தலைவராக உயர்ந்துள்ளார். 1987-ம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி. எம்எஸ்சி விவசாயம், எம்பிஏ, பிஹெச்டி உள்ளிட்ட பட்டப்படிப்புகளை படித்து பட்டம் பெற்றவர். சைபர்கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்திருக்கிறார். 25 -வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியானார் சைலேந்திரபாபு. கோபிச் செட்டிப்பாளையத்தில் ஏஎஸ்பியாக பணியைத் தொடங்கிய இவர் எஸ்பியாக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் பணியாற்றினார். சென்னை அடையாறு துணை கமிஷனாராகவும் பணியாற்றியவர்.

சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக இருந்தார். மேலும் சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை கமிஷனராகப் பணியாற்றிய போது 2004- ம் ஆண்டு கட்டப்பஞ்சாயத்து, ரௌடி சாம்ராஜ்ஜியத்தில் கொடிக்கட்டிப்பறந்த தாதாக்கள் ‘காட்டான்’ சுப்பிரமணி, ‘கேட்’ ராஜேந்திரன், ‘பூங்காவனம்’ ராமமூர்த்தி, ‘மாட்டு’ சேகர், ‘டைசன்’ சேகர், ‘பாக்சர்’ வடிவேல் போன்ற ரௌடிகள் மீது நடவடிக்கை எடுத்தார். வட சென்னையில் 4 ஆண்டுகள் இணை கமிஷனராக பணியாற்றி ரௌடிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார்.

சென்னையை அடுத்து 2010- ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாநகர போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய போதுதான், பள்ளிச் சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மோகனகிருஷ்ணனைக் என்கவுன்டரில் சுடப்பட்டார். பின்னர் சைலேந்திரபாபு வடக்கு மண்டல ஐஜியாக பதவியேற்றார். அதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். 2015- ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போது சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கடல்போல சூழ்ந்து கொண்டது. உடனடியாக களத்தில் இறங்கிய சைலேந்திரபாபு கடலோர பாதுகாப்பு குழும நீச்சல் வீரர்களுடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்.

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

தமிழகம் முழுவதும் கூடுதலாக கடலோர பாதுகாப்பு குழும நிலையங்கள் தொடங்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் மீனவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் கடலோர பாதுகாப்பு குழுமத்தை மேலும் பலப்படுத்தினார். அந்நிய நாட்டினர் தமிழக கடல் எல்லைக்குள் ஊடுருவ முடியாதபடி தமிழக கடல் எல்லைகள் பாதுகாக்கப்பட்டது. கள்ளத்தோணியில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கைத் தமிழர்கள் நடுவழியில் கடலில் மூழ்கி உயிரை இழப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தார். சிறைத்துறை தலைவராக சைலேந்திரபாபு பணியாற்றியபோது சிறைக்கைதிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம், கைதிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். தண்டனை முடிந்து விடுதலை ஆகும் கைதிகளுக்கு இந்தத் திட்டங்கள் மறுவாழ்வை அளித்தது.

தீயணைப்புத்துறையில் டிஜிபியாக கூடுதல் பொறுப்பில் இருந்த போது அந்தத் துறையின் வளர்ச்சிக்காக பல நடவடிக்கை எடுத்தார். ரயில்வே காவல்துறை டிஜிபியாக பணியாற்றியபோது பல குற்ற வழக்குகளை திறம்பட துப்பு துலக்கினார்.

சைலேந்திரபாபு, குடியரசுத்தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்காக பாரதப் பிரதமரின் பதக்கம், சந்தன கடத்தல் வீரப்பன் அதிரடிப்படையில் பணியாற்றி வீரதீர செயல்கள் ஆற்றியதற்காக முதல்வர் பதக்கம் ஆகியவற்றை பெற்றியிருக்கிறார். இவர் சில நூல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸாக லட்சியத்தோடு இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டியாகவும் இருந்துவருகிறார்.

சைலேந்திரபாபு தன்னுடைய பணிக்காலத்தில் டெல்லியில் அயல் பணிக்குச் செல்லாதவர். அதே நேரத்தில் எந்தவித சர்ச்சையிலும் சிக்காத நேர்மையாக அதிகாரி என பெயர் பெற்றவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பணியில் நீண்ட காலம் அனுபவம் பெற்றவர். 30.6.2022-ம் ஆண்டு ஓய்வு பெற இருந்த சைலேந்திரபாபு, தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டதால் அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார். காவல்துறை பணியை தவிர்த்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். சைக்கிளிங்கில் ஈடுபடுவதில் அதித ஆர்வம் கொண்ட சைலேந்திரபாபு, ஒரே நாளில் சைக்கிள் மூலம் புதுச்சேரி வரை சென்று திரும்பியிருக்கிறார். இதுதவிர சமூகம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துபவர். சமூக வலைதளங்களடிலும் ஆக்டிவ்வாக செயல்படுபவர் சைலேந்திரபாபு.



from Latest News https://ift.tt/3hhRz0N

Post a Comment

0 Comments