https://gumlet.assettype.com/vikatan/2021-06/f75c1af1-a158-449f-b1f5-439ca74ed8ef/IMG_20210629_WA0011.jpgகேரளாவில் இருந்து குமரிக்கு கொண்டு வரப்பட்ட மண்ணுளி பாம்பு! -வனத்துறையினரிடம் சிக்கியது எப்படி?

மண்ணுளிப் பாம்பு மருத்துவ குணம் மிகுந்தது, பல கோடி ரூபாய் வரை விற்பனை ஆகும் என்று சில கும்பல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. மண்ணுளிப் பாம்பை வைத்து ஏமாற்றும் காட்சிகள் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கும். ஆனாலும் மண்ணுளிப் பாம்பு புற்றுநோயை குணமாக்கும், ஹைச்.ஐ.வி-க்கு மருந்து என அதற்காக கள்ளச்சந்தை நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. இருதலை மணியன் என அழைக்கப்படும் விஷத்தன்மையற்ற மண்ணுளி பாம்பைத் தேடி பல கும்பல்கள் அலைந்து வருகின்றன. அதில் ஒரு கும்பல் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையிடம் சிக்கியது.

பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட நாகர்கோவில் பகுதியில் சொகுசு காரில் மண்ணுளி பாம்பு கடத்தப்படுவதாக பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனச்சரகர் திலீபன் தலைமையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வடசேரி பகுதியில் சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் மண்ணுளி பாம்பு இருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

மண்ணுளிப் பாம்பு

மண்ணுளிப் பாம்பை காரில் கடத்தி வந்த கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பிரசாந்த், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சதீஷ் சந்திரன் நாயர், கன்னியாகுமரி மாவட்டம் சூழல் பகுதியைச் சேர்ந்த ஜோஸ் வில்பிரட் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரளா மாநிலத்தில் சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை பிடித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் விற்பனை செய்ய கொண்டுவந்தது தெரியவந்தது.

மண்ணுளி பாம்பு சுமார் மூன்று அடி நீளமும், 2,600 கிராம் எடையும் இருந்தது. லாக்டெளன் காரணமாக கேரளத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த பிறகு சூழல் பகுதியில் சொகுசு காரை வாடகைக்கு எடுத்து மண்ணுளி பாம்பை கடத்தியுள்ளனர். வன விலங்குகளை வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றம் என்பதால, கைது செய்யப்பட்ட மூவருக்கும் தலா 75,000 ரூபாய் வீதம் ரூ.2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மண்ணுளிப் பாம்பை மீட்ட வனத்துறையினர்

கொரோனா காலம் எனதால் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைக்காமல் அபராத தொகையை வாங்கிக்கொண்டு விடுவித்தனர். மீட்கப்பட்ட மண்ணுளி பாம்பு குமரி மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது. மண்ணுளி பாம்பு கடத்தி வருவது குறித்து அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவரே வனத்துறைக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. மண்ணுளி பாம்பை விலைக்கு வாங்க முயன்ற நபர் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.



from Latest News https://ift.tt/3xZ4Thg

Post a Comment

0 Comments