https://gumlet.assettype.com/vikatan/2021-06/65b790f4-2827-418e-951d-8ffa408fc754/IMG_20210628_232607.jpgஒரு வருடமாக மனச்சோர்வு; தலைமுடியைப் பிய்த்து சாப்பிட்ட மாணவி; வயிற்றில் உருவான 1.5 கிலோ கட்டி!

மனிதர்களின் சராசரி நடைமுறை வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி, புதியதொரு வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா பெருந்தொற்றுக் காலம். வெளியுலகத் தொடர்பற்று, வீடே உலகமாகிப்போன தனிமைக் காலம். சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அளிக்கப்பட்ட காலத்தில், பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட, குழந்தைகள் மட்டும் தனிமையில் வீட்டில் இருப்பது அதிகரித்து வந்தது. அப்படி, தனிமையில் இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாகத் தன் தலைமுடியைத் தானே பிய்த்துத் சாப்பிட்டு, உடலளவிலும் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகற்றப்பட்ட கட்டி

Also Read: `கொரோனா மனச்சோர்வு நீங்க புது கேம்!' -மதுரையில் புது முயற்சி

விழுப்புரத்தை சேர்ந்த அந்த மாணவி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 10-ம் வகுப்பு என்பதால், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்தபடியே தினமும் சுமார் 6 மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்பில் படித்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி, அப்பா - அம்மா இருவரும் தினமும் வேலைக்குச் சென்றுவிடுவதால் தன் பாட்டியுடன் மட்டுமே இருந்துள்ளார் அம்மாணவி. பாட்டியைத் தவிர்த்து, வெளியுலகத் தொடர்பு, நண்பர்கள், உறவினர்கள் என யாருமின்றி தனிமையிலேயே இருந்து வந்த அக்குழந்தை, ஒரு கட்டத்தில் மனதளவில் சோர்வடைந்து தன் தலைமுடியைத் தானே பிய்த்துச் சாப்பிடத் தொடங்கியுள்ளார்.

திடீரென ஒரு நாள் வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மாணவி. மாணவியின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர் ஸ்கேன் மற்றும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம், வயிற்றில் முடியுடன் கட்டி இருப்பதை அறிந்தார். அதைத் தொடர்ந்து, குடல் அறுவை சிகிச்ச நிபுணர் ராஜமகேந்திரன் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சை மூலம் ஒரு கிலோ முடியாலான கட்டியை அச்சிறுமியின் வயிற்றிலிருந்து அகற்றியுள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவர் ராஜமகேந்திரனிடம் பேசினோம். ``தனிமையில் படித்துக்கொண்டிருந்ததால், கடந்த ஒரு வருடமாக அந்த மாணவி மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கிறார். அவருடைய தலைமுடியை சாப்பிட ஆரம்பித்திருக்கிறார். கேசம், செரிமானம் ஆகாது. அதனால், கட்டி மாதிரி உருமாற்றம் பெற்றிருக்கிறது. இந்த மாதிரி, தலைமுடியைச் சாப்பிடும் பிரச்னையை, `டிரிகோஃபேஜியா' (Trichophagia) என்போம். சிலர் துணி, இரும்பு, முடி போன்றவற்றைச் சாப்பிடுவார்கள். ஆனால், மென்றுவிட்டுத் தூப்பிவிடுவார்கள். இந்த மாணவி அதை விழுங்கி இருக்கிறார். சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்தபோதுதான், அவரை மருத்துவமனை அழைத்து வந்தார்கள்.

தொட்டுப் பார்த்தபோது, கட்டி மாதிரி இருந்தது. அதனால் சிடி ஸ்கேன் எடுக்க அனுப்பி வைத்தோம். ரிப்போர்ட்டில்தான், அது முடி எனத் தெரியவந்தது. மாணவியின் அம்மா நம்பவே இல்லை. பின்னர், எண்டோஸ்கோப்பி மூலம் சோதித்தோம். அது முடிதான் என உறுதி செய்தோம். பின் பெற்றோர்களிடம் தெரிவித்துவிட்டு, அறுவைசிகிச்சை செய்து கட்டியை எடுத்துவிட்டோம்.

நீர் கோவையோடு 1.5 கிலோ எடை இருந்த அந்தக் கட்டி, பின்னர் ஒரு கிலோ எடையுடைய முடியுடன்கூடிய கட்டியாக வெளிப்பட்டது.

Hospital (Representational Image)

Also Read: சிறுமி தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்... அறுவைசிகிச்சையின்றி அகற்றிய அரசு மருத்துவர்கள்!

பத்து நாள்கள் மருத்துவமனையில் கவனிப்பில் இருந்த மாணவிக்கு, உடல் நலம் சரியானதும் மனநல மருத்துவர் மூலம் ஆலோசனை வழங்கினோம். அப்போதுதான், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அந்த மாணவி முடியைச் சாப்பிட்டிட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தனிமையில் இருந்தபோது ஏற்பட்ட மனச் சோர்வால் இந்த மாணவி இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்" என்றார்.

இதுபோன்று தனிமையில் இருக்கும் குழந்தைகள் பாதுகாப்புக்காக பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றித் தொடர்ந்து பேசிய டாக்டர்,

``பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் மகிழ்ச்சியுடன் பழக வேண்டும். கொரோனா தொற்றுக் காலம் என்பதால், வெளியில் செல்லாமல், வீட்டின் அருகேயாவது ஒரு `வாக்' அழைத்துச் செல்லலாம். நண்பர்களுடன் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.



from Latest News https://ift.tt/3ha2AAY

Post a Comment

0 Comments