மீன்பிடி தடைக்காலம் 60 நாட்கள் முடிந்து, மீனவர்கள் கடலுக்கு வழக்கம்போல் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மடவாமேடு மீனவக் கிராமத்திலுள்ள மீனவர்கள் ஃபைபர் படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த 3 நாள்களாக அவர்களின் வலைகளில் வழக்கத்தைவிட அதிக அளவில் மத்தி, சூரை, சீடி வகை மீன்கள் கிடைத்தன. மத்தி வகை மீன்களை கேரளாவினர் விரும்பி உண்கின்றனர். இதில் கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகம் உள்ளதாகவும், மருத்துவக் குணம் கொண்டதாகவும் இருப்பதாக கூறுகின்றனர். எனவே கேரளாவிற்கு மத்தி மீன்களை அதிகமாக ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஒரு கிலோ மத்தி மீன்கள் ரூ 130, சூரை மீன்கள் ரூ 200, சீடி மீன்கள் ரூ 120 -க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மீன்கள் கேரளாவில் உணவிற்காகவும், மீன் எண்ணெய் தயார் செய்யவும் பயன்படுகின்றன.
ஒரே படகில் அதிக அளவிலான மத்தி மீன்கள் பிடிபடுகின்றன. இம்மீன்களை பிளாஸ்டிக் பெட்டிகளில் டன் கணக்கில் முறையான ஐஸ் கட்டிகளை வைத்து பேக்கிங் செய்து, கண்டெய்னர் லாரிகள் மூலம் கேரளா,கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

நாள்தோறும் மடவாமேடு மீன்பிடி தளத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இத்தகைய ஏற்றுமதியால் நல்ல வருவாய் கிடைப்பதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
from Latest News https://ift.tt/3w6wLyC
0 Comments