புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், தொகுதிக்குட்பட்ட பிரச்னைகள், கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "மாவட்டத்தின் பல இடங்களில் நெல் மூட்டைகளைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. கொள்முதல் செய்வதில் பல இடங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் தான், அறந்தாங்கியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விஜயபாஸ்கரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, " விராலிமலை எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்பி வருகிறார். ஏதோ அவர்களது ஆட்சியில் அவர்கள் எதிலுமே தலையிடாதது போலவும், எல்லாவற்றிலும் நியாயமாக நடந்து கொண்டது போலான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, அதே நேரத்தில் தி.மு.கவின் குறுக்கீடு இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைகிறார். முத்துப்பட்டி பகுதியில் ஏற்கெனவே, ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை விஜயபாஸ்கர் மீண்டும் திறந்து வைக்கிறார்.
இதுவே, அ.தி.மு.க ஆட்சியாக இருந்திருந்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் நாங்கள் திறக்க முயன்றால், எங்களை வீட்டை விட்டுக்கூட வெளியே வர விட்டிருக்க மாட்டார்கள். புதுக்கோட்டையில் அரசு விழாவுக்கு அழைப்பார்கள். ஆனால், எதுவும் பேசக்கூடாது என்று சொல்லி அழைத்துச் செல்வார்கள். அதுவும் கடைசி நேரத்தில் எதுவும் பேசிவிடுவோமோ என்று பயந்து உடனே கைது செய்து மண்டபத்தில் அடைத்துவிடுவார்கள். ஆனாலும், அதுபோன்ற நிலையை நாங்கள் எதிர்க்கட்சியினருக்குக் கொடுப்பதில்லை. எங்களது இந்தப் பெருந்தன்மைகளை தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் வரம்பு மீறி நடந்துகொள்கிறார்.
மேலும், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகன்டன் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் ஏசி வசதிகளுடன் சகல செல்வாக்காக இருக்கிறார் என்பது போன்று வரும் செய்திகள் அனைத்தும் தவறானது. சில தினங்களுக்கு முன்னதாகவே அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டு விட்டார். தற்போது அவருக்கு 'ஏ' கிளாஸ் வசதிகள் கேட்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் ஜனநாயகத்திற்கு மரியாதை கொடுப்பவர். எனவே சட்டப்படி என்ன மாதிரியான சலுகைகள் இருக்கிறதோ அதைத்தான் கொடுப்போமே தவிர, விதிகளுக்குப் புறம்பாக யாருக்கும் எந்தவித சலுகைகளும் வழங்கப்படமாட்டாது" என்றார்.
from Latest News https://ift.tt/3dpom2z
0 Comments